ஒரு கிராமத்தில் ஒருவருக்கு கூட வராத கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. புதுக்கோட்டை கலெக்டர் எடுத்த ஆக்சன்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதிக்கு உட்பட்ட பூம்பள்ளம் கிராமத்தில் ஒருவருக்கு கூட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால், குடும்ப பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று திமுக அறிவித்திருந்தது.

இதன்படி ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழகத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆட்சிக்கு வந்த இரண்டு வருடங்களுக்கு பின்னர் மகளிர் உரிமைதொகை வாக்குறுதி செப்டம்பர் முதல் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும் இந்த ஆண்டு மகளிர் உரிமை தொகை வழங்க 7000கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பிக்க வேண்டும் என்றும், தகுதி உடையவர்களுக்கே வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்தது. இதற்காக சில கட்டுப்பாடுகளையும் அறிவித்தது. ஆண்டு வருமானம் 2.5லட்சத்தை தாண்டக்கூடாது. கார் உள்ளிட்ட கனரக வாகனங்கள் வைத்திருக்கக்கூடாது. ஐந்து ஏக்கர் நிலத்திற்கு மேல் வைத்திருக்கக்கூடாது. வருமான வரி கட்டுபவர்களாக இருக்கக்கூடாது என்று அறிவித்தது.
மகளிர் உரிமை தொகை கேட்டு1.62லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 1.06 கோடி பேருக்கு மகளிர் உரிமைதொகை கடந்த செப்டம்பர் 14 மற்றும் 15ம் தேதிகளில் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இனி ஒவ்வொரு மாதமும் 14 மற்றும் 15ம் தேதிகளில் 1000 ரூபாய் உரிமை தொகை செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே நிராகரிக்கப்பட்ட 57 லட்சம் பேரில் பல ஏழைகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது. இதனிடையே மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத நபர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன்படியே, மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், தாலுகா அலுவலகத்திலும் மீண்டும் விண்ணப்பித்து வருகிறார்கள்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூம்பள்ளம் கிராமத்தில் வசிக்கும் 56 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு பெண்களுக்கும் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
இதனிடையே ஒரு கிராமத்தைச் சேர்ந்த யாருக்குமே உரிமை தொகை கிடைக்காததால் சம்பந்தப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யாவைச் சந்தித்து அவர்கள் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் மெர்சி ரம்யா, இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இரண்டு அலுவலர்களை உடனடியாக நியமித்து, மகளிர் உரிமைத் தொகை குறித்த விபரங்களை கிராமத்தைச் சேர்ந்த பெண்களிடம் வாங்குமாறும் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் கூறுகையில், " நாங்கள் எல்லாருமே மகளிர் உரிமைத் தொகை கிடைப்பதற்காக பதிவு செய்தோம். ஆனால், எந்த எஸ்எம்எஸ்சும் வரவில்லை. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றார்கள்.இதனிடையே நேற்று மாவட்ட ஆட்சியர் குறைதீர் கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டி மனு அளித்தனர்.












Click it and Unblock the Notifications