வெங்காயம் கொடுத்து ரஜினி பிறந்தநாள் கொண்டாட்டம்... வித்தியாசமாக யோசித்த ரசிகர்கள்!
Recommended Video
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகளுடன், வெங்காயத்தை வழங்கி நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை வித்தியாசமான முறையில் அவரது ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்.
வருகின்ற 12 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் 69 வது பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாகவே அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் மகளிரணி சார்பில் ரஜினிகாந்தின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த மெய்நின்றநாதர் சுவாமி ஆலயத்தின் முன்னாள் கூடிய ரஜினி ரசிகர்கள், பிரம்மாண்ட சிவன் சிலை முன்பிலிருந்து, தலைமைப் புலவர் நக்கீரர் சிலை அமைந்துள்ள நடைபாதை வழியாக பூ, பழம், இனிப்புகளுடன் வெங்காயத்தை தாம்பூலத்தில் வைத்து ஊர்வலமாக சென்று மெய்நின்றநாதர், ஒப்பிலாமணி அம்பிகைக்கு ரஜினி பெயரில் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளுடன், வெங்காயத்தையும் சேர்த்து வழங்கி நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டடினர். பொதுமக்களுக்கு இனிப்புகள் உடன் வெங்காயமும் சேர்த்து வழங்கப்பட்டதால், அதனைப் பெற்ற மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
இது குறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறுகையில், இந்தாண்டு தலைவர் ரஜினியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டோம். வழக்கம்போல கோயிலில் சிறப்பு வழிபாடுகள் செய்து இனிப்பு வழங்கி கொண்டாடுவது போல, இந்த ஆண்டும் இனிப்புகளுடன் வந்தோம்.

அதன்பிறகு தற்போது வெங்காயத்திற்காக மக்கள் படும் அவதியைப் பார்த்து, இனிப்புகளுடன், வெங்காயத்தையும் சேர்த்து வழங்கலாம் என்று யோசித்து வெங்காயத்தையும் சேர்த்து வழங்கினோம். பொதுமக்களும் இனிப்புகளை விட வெங்காயத்தை முதலில் எடுத்துக் கொண்டனர்.

மேலும் இதே போல புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மக்களுக்கு தேவையான விலை உயர்ந்த வெங்காயம் வழங்கி தலைவர் ரஜினிகாந்த் பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்டுள்ளோம் என்று கூறினர்.


Click it and Unblock the Notifications
