மட்டன் பிரியாணிக்காக இப்படியா? புதுக்கோட்டையில் திமுகவினர் செய்ததை பாருங்க.. அந்த 2 பேர் தான் பாவம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நடந்த திமுகவினர் ஆலோசனை கூட்டத்தில் மட்டன் பிரியாணி சமைக்கப்பட்டது. மட்டன் பிரியாணி மூக்கை துளைத்த நிலையில் திமுகவினர் போட்டி போட்டு ஓடியதால் கடும் தள்ளு - முள்ளு ஏற்பட்டு 2 பேர் மயக்கமடைந்தனர்.
தமிழகம் முழுவதும் திமுகவினர் சார்பில் மாவட்டம், தாலுகா, ஒன்றியம் வாரியாக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் என்பது நடந்து வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று குளத்தூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது.

புதுக்கோட்டை-திருச்சி சாலையில் அமைந்துள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் ஏராளமான திமுகவினர் குவிந்தனர். மாவட்ட அவை தலைவர் அரு.வீரமணி தலைமை ஏற்றார். மாவட்ட செயலாளர் கேகே செல்லபாண்டியன் வரவேற்புரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, எம்பி அப்துல்லா, எம்எல்ஏ முத்துராஜா உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். அமைச்சர் ரகுபதி பேசுகையில், ‛‛மாவட்ட நிர்வாகிகள் வரும் சட்டசபை தேர்தலுக்கு இப்போது இருந்தே தயாராக வேண்டும். இது சாதாரணம் அல்ல. இது திமுகவின் 4ம் தலைமுறைக்கான மைய தேர்தல். இதனால் மிகவும் உற்சாகமாக தேர்தல் பணியாற்ற வேண்டும்'' என்று பேசினார்.
இதுதவிர மாவட்டத்தில் கட்சியினர் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுகவினருக்கு மட்டன் பிரியாணி சமைக்கப்பட்டு இருந்தது. சுமார் 3 ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணி சமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பிரியாணி வாசம் மூக்கை துளைத்தது.
இதையடுத்து நிகழ்ச்சி முடிந்தவுடன் திமுகவினர் நேரடியாக மட்டன் பிரியாணி சாப்பிட சென்றனர். அப்போது அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஓடினர். இதனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஏராளமானவர்கள் தவறி கீழே விழுந்தனர். இதில் சிலர் மீண்டும் எழுந்து பிரியாணிக்கு ஓடிய நிலையில், இன்னும் சிலரை உடன் வந்தவர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீட்டனர்.
இது ஒருபுறம் இருக்க இன்னொரு தரப்பினரோ யார் கீழே விழுந்தால் என்ன? நமக்கு மட்டன் பிரியாணி தான் முக்கியம் என்று சீட் பிடிப்பதில் அதிக கவனம் செலுத்தினர். இந்த கூட்ட நெரிசலில் ஏற்பட்ட தள்ளு முள்ளுவால் தவறி கீழே விழுந்து 2 பேர் மயங்கினர். இதுதொடர்பான வீடியோவை எதிர்க்கட்சியினர் வலைதளங்களில் பதிவிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications