இதுதான் தேவை.. "சாட்டையை" சுழற்றிய கவிதா ராமு ஐஏஎஸ்.. 2006 சம்பவத்தை நினைவு கூர்ந்த திமுக எம்பி!
புதுக்கோட்டை: புதுக்கோட்டையின் வேங்கைவயல் கிராமத்தில் வசித்து வந்த ஆதி திராவிடர் மக்களை ஊர் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், இதனை எதிர்த்து கிராம மக்களோடு ஆட்சியர் கவிதா ராமு ஆலய நுழைவு பிரவேசத்தில் ஈடுபட்டார். இதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், திமுக எம்பி செந்தில் குமாரும் வாழ்த்து கூறி ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் மதுரை ஆட்சியராக இருந்தபோது நடந்த சம்பவத்தையும் நினைவு கூர்ந்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலான அளவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களுக்கும் அருகில் உள்ள ஆதிக்க சமூகத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இவர்களுக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது இவர்கள் கோயிலுக்குள் நுழையவும் பொது இடங்களை பயன்படுத்தப்படும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை சிலர் எதிர்த்து கேட்டிருக்கின்றனர். இதனையடுத்து இவர்களுக்கும் ஆதிக்க சமூகத்தினருக்கும் இடையே சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த குழந்தைகள் சிலர் வாந்தி, மயக்கம் மற்றும் ஒவ்வாமையால் அவதிப்பட்டுள்ளனர். குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குடிநீரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் நீரில் கலப்படம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

மனித மலம்
இதனையடுத்து கிராம மக்கள் குடிநீர் தொட்டி மீது ஏறி சோதனை செய்துள்ளனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டிருந்திருக்கின்றன. இது தொடர்பாக காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து கந்தர்வக்கோட்டை சிபிஎம் எம்எல்ஏ சின்னதுரை, வட்டார வளர்ச்சி துறை அலுவலர் ஆனந்தன் ஊராட்சித் தலைவர் பாத்திமா ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரையடுத்து காவல்துறை விசாரணையில் இறங்கியுள்ளது.

ஆட்சியர் விசாரணை
இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அடுத்தநாள் (டிச.27) மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இந்த கிராத்தை ஆய்வு செய்ய நேரில் சென்றிருந்தார். அங்கு போன பின்னர்தான் கிராமத்தின் உண்மை நிலை அவருக்கு புரிந்திருக்கிறது. கிராம மக்கள் ஏராளமான புகார்களை ஆட்சியரிடம் தெரிவித்தனர். இதில் முக்கியமான ஒன்று கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்கிற புகார். இதனையடுத்து அம்மகளை கையோடு அழைத்துச் சென்று கோயிலுக்குள் நுழைய முன்றுள்ளார். இதனை ஆதிக்க சமூகத்தினர் வெளிப்படையாக எதிர்க்காமல் முணுமுனுத்துள்ளனர்.

ஆலைய நுழைவு பிரவேசம்
இவ்வாறு இருக்கையில், கோயில் பூசாரியின் மனைவி சிங்கம்மாளுக்கு திடீரென அருள் வந்துள்ளது. அப்போது சாமி ஆடிக்கொண்டே ஆதி திராவிடர் சமூக மக்களை இழிவாக பேசியுள்ளார். இதனையடுத்து இவர் மீதும் அஞ்சப்பன் என்பவர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊருக்குள் உள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறை பின்பற்றப்பட்டதாக டீக்கடை உரிமையாளர் மற்றும் அவரது மனைவி மீதும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்வத்தையடுத்து கோயிலில் ஆதி திராவிட மக்கள் வழிபாடு செய்தனர்.

பாராட்டு
ஆதி திராவிடர் மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் திமுக எம்பி செந்தில் குமாரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கதில் பகிர்ந்துள்ளதாவது, "இந்த நடைமுறைதான் கல்வி நிலையங்களில் கற்பிக்கப்பட வேண்டும். இதனை அனைவரும் பின்பற்ற வேண்டும். இதனை சாத்தியமாக்குவதில் வாக்கு வங்கி அரசியலில் சமரசம் செய்துகொள்ளாத அரசியல் வாதிகளை விட அதிகாரிகளுக்கு பல நன்மைகள் இருக்கின்றன" என்று கூறியுள்ளார்.

உதயசந்திரன்
மேலும், முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருக்கின்றன ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் மதுரையில் மாவட்ட ஆட்சியராக இருந்த போது ஆற்றிய சிறப்பான பணியையும் நினைவு கூர்ந்துள்ளார். அதாவது மதுரையின் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி மற்றும் நாட்டாமங்கலம் ஊராட்சி தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கானதாக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இங்கிருந்த ஆதிக்க சமூகத்தினர் இதனை ஏற்கவில்லை. இதன் காரணமாக தேர்தல் நடந்து தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஆதிக்க சமூகத்தினர் கொடுக்கும் நெருக்கடியை தாங்க முடியாமல் பதவி விலகிவிடுவார்கள். இதன் காரணமாக 1996ம் ஆண்டு முதல் இங்கு தேர்தல் நடத்த முடியவில்லை.

பிரச்னைக்கு முற்றுப்புள்ளி
இந்த பிரச்னை 10 ஆண்டுகளாக நீடித்து வந்தது. 2006ம் ஆண்டு திமுக ஆட்சியிலும் இப்பிரச்னை எதிரொலித்த நிலையில் அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி இதற்கு தீர்வு காகண முடிவு செய்தார். எனவே அவரது அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்த மு.க.ஸ்டாலினிடமும், அப்போது மதுரை ஆட்சியராக செயல்பட்டு வந்த உதயசந்திரனிடம் இது குறித்து விவாதித்துள்ளார். பின்னர் இவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக இப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. தற்போது உதயசந்திரன் முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
