இ-பட்டா.. புதுக்கோட்டையில் கோடிக்கணக்கான ரூபாயில் நத்தம் புறம்போக்கு நிலங்கள்! திகைத்த அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: ஒரு சாதாரண இடத்துக்கு பட்டா வாங்க வேண்டுமென்றாலே அரசு அலுவலகங்களுக்கு பலமுறை அலைய வேண்டியிருக்கும். அப்படியிருக்கும்போது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அரசு நிலங்களுக்கே முறைகேடாக பட்டா வழங்கப்பட்டிருந்தால்? அதுவும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் பெயரில் உள்ள அரசு லாகின் ஐடிகளை பயன்படுத்தி இந்த வேலை நடந்திருந்தால்? புதுக்கோட்டையில் இப்போது வெளியாகியுள்ள இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...!!

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் அரசு நத்தம் புறம்போக்கு நிலங்கள் உள்ளன. இந்த இடங்களில் நீண்டகாலமாக வசித்து வரும் பொதுமக்கள் பட்டா கேட்டு விண்ணப்பிக்கும்போது, அவர்களுக்கு ஆன்லைன் மூலம் இ-பட்டா வழங்கப்பட்டு வருகிறது.

E-Patta Scam Pudukkottai Natham Poramboke Land -

இதற்காக துணை வட்டாட்சியர், வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியர் என ஒவ்வொரு கட்டத்திலும் ஒப்புதல் பெற வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்களது அரசு லாகின் ஐடி மூலம் ஒப்புதல் அளித்த பிறகுதான் பட்டா வழங்கப்படும்.

நத்தம் புறம்போக்கு நிலங்கள்

ஆனால், அதிகாரிகளின் பணிச்சுமை காரணமாக அவர்களது உதவியாளர்களே அரசு லாகின் ஐடிகளை பயன்படுத்தி இந்த பணிகளை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையே சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்கோகர்ணம் வட்டம், கவிநாடு மேற்கு, வாகவாசல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு நிலங்களுக்கு முறைகேடாக இ-பட்டா வழங்கப்பட்டுள்ளது... இந்த நிலங்களின் மதிப்பு கோடிக்கணக்கான ரூபாய் இருக்கும் நிலையில், பல லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு பட்டா வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வந்த பிரசன்னா, புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக நில அளவையர் பிரிவில் பணிபுரிந்த விஜயலட்சுமி, அதே அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்த லதா, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்த ரஞ்சித் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் உயர் அதிகாரிகளின் அரசு லாகின் ஐடிகளை பயன்படுத்தி இ-பட்டாக்களை வழங்கியிருப்பதும் அம்பலமாகி உள்ளது..

கூண்டோடு சிக்கிட்டாங்க

இந்த முறைகேடு காரணமாக இவர்கள் சிக்கியுள்ளனர்.. இந்த விவகாரம் எப்படி வெளியே வந்தது தெரியுமா? வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட இ-பட்டா பரிந்துரையை புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தற்செயலாக பார்த்திருக்கிறார்..

அப்போது அதற்கான ஆவணங்கள், பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களின் கோரிக்கை மனுக்கள் போன்றவற்றையெல்லாம் ஆய்வு செய்துள்ளார். அதில் சம்பந்தப்பட்ட இடங்களின் மதிப்பு அதிகமாக இருந்ததும், பட்டா பெறுவதற்கு தேவையான முறையான ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து விசாரித்தபோதுதான் வட்டாட்சியருக்கே தெரியாமல் அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள் அரசு லாகின் ஐடிகளை தவறாக பயன்படுத்தி பட்டா வழங்கியது தெரியவந்தது.

தொடர்ந்து இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியர் அருணாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தியதில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது.

மொத்தம் 4 பேர் சஸ்பெண்ட்

இதையடுத்து முதலில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வந்த பிரசன்னா கலால் துறைக்கு மாற்றப்பட்டார். பிறகு மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இதேபோல் புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்த லதா, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்த ரஞ்சித், புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக நில அளவையர் பிரிவில் பணிபுரிந்த விஜயலட்சுமி ஆகிய 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்தடுத்து சிக்குவார்களா?

இந்த விவகாரத்தில் தற்போது 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வட்டாட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என பல்வேறு அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக 4 வட்டாட்சியர்கள் இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

அதனால் முழுமையான விசாரணை முடிந்த பிறகுதான் இந்த மோசடியில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது, உயர் அதிகாரிகள் யாரேனும் பின்னணியில் இருக்கிறார்களா என்பது தெரியவரும்.

குற்றவியல் நடவடிக்கை?

எனினும், இந்த முறைகேடு தொடர்பாக கடந்த ஒரு மாதமாக புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம் சத்தியமங்கலம் பகுதியிலும், புதுக்கோட்டை மாநகரப் பகுதியிலும் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை தனியாருக்கு பட்டா வழங்கியதாக புகார்கள் வந்தவண்ணம் இருந்ததாம்..

பட்டா கேட்டு வெப்சைட் வாயிலாக வந்த விண்ணப்பங்களுக்கு, வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோரின் இணையதள முகவரிகளை பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கே தெரியாமல் ஒப்புதல் அளித்து பட்டாக்களின் பெயர்களை மாற்றம் செய்துள்ளதுதான், வருவாய்த்துறை அலுவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.

இப்போது, இதுதொடர்பாக துறைரீதியான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்த பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம் என்றும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+