”தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு” 2 அமைச்சர்கள் இருந்தும் வேதனை.. அடுத்து போராட்டம் தான்.. விஜயபாஸ்கர்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நடந்து கொள்வது வேதனை அளிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மூன்று நாட்களில் மீண்டும் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளதாக கூறிய விஜயபாஸ்கர், ஒருவேளை ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டுக்கான தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர செய்யவில்லை என்று மாவட்ட நிர்வாகம் இன்று நடக்க இருந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் தச்சங்குறிச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மட்டுமல்லாது ஊர் மக்களும் குவிந்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டு, அங்கு கூடியவர்களை அப்புறப்படுத்தினர். இந்த நிலையில் வெளியூரில் இருந்து ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்காக வந்த காலை உரிமையாளர் ஒருவர் தனது காளையை ஜல்லிக்கட்டு திடலில் திடீரென்று அவிழ்த்து விட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

விஜயபாஸ்கர் பேட்டி
இதனைத்தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தச்சங்குறிச்சி வந்து விழா கமிட்டி, அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் திடீரென்று ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு அனுமதி வழங்காதது வருத்தத்துக்குரியது.

நடவடிக்கை தேவை
மாவட்ட நிர்வாகம் மற்றும் விழா கமிட்டி இணைந்து பேசி பாதுகாப்பில் என்னென்ன குறைகள் உள்ளதோ அதனை சரிசெய்து நடப்பாண்டின் முதல் ஜல்லிக்கட்டு நடப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது.

3 நாட்களில் ஜல்லிக்கட்டு
மூன்று தினங்களுக்குள் ஜல்லிக்கட்டு தச்சன்குறிச்சி நடப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார். மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் நடைபெறுவதற்கு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போராட தயார்
இன்று ஜல்லிக்கட்டு நடக்காததற்கு அரசியல் காரணங்கள் உள்ளது என்று மனதிற்குள் இருந்தாலும், அதனை வெளிக்கொண்டு வராமல் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்ற கோணத்தில் நான் பயணிக்கிறேன். ஒருவேளை மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளிக்காவிட்டால், நானே முன்நின்று போராட்டம் செய்ய தயாராக உள்ளேன். அதற்கான சூழ்நிலையை மாவட்ட நிர்வாகம் உருவாக்காது என்று நினைக்கிறேன்.

வேதனை
மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருந்தாலும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நடந்து கொள்வது வேதனைக்குரியது. பொதுமக்கள் தங்களுடைய ஆதங்களை தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெண்கள் ஜல்லிக்கட்டு அனுமதி அளிக்காதது குறித்து பல கருத்துக்களை அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். அரசியல் காரணங்கள் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications