மீண்டும் MP பதவி மீது எனக்கு ஆசை! தமிழக காங். தலைவர் பதவி மீது எனக்கு பேராசை! -கார்த்தி சிதம்பரம்
புதுக்கோட்டை: சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்.பி.ஆக வேண்டும் என்ற ஆசை தனக்கு உள்ளதாகவும் அதே போல் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக வேண்டும் என்ற பேராசையும் தனக்கு இருப்பதாகவும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தனக்கு ஆசை, பேராசை என இரண்டும் உள்ளதாக கூறியுள்ள கார்த்தி சிதம்பரம், ஏன் தனக்கு 2 பதவிகள் மீதும் ஆசை இருக்கக் கூடாது அதற்கு தகுதி இல்லாத நபரா என செய்தியாளர்களிடம் எதிர் கேள்வி எழுப்பினார். இரண்டு பதவிகளையும் தன்னால் ஒரே நேரத்தில் ஏற்று செயல்பட முடியும் என்றும் அதற்கான தகுதியும், திறமையும் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துக்கொண்டே தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருக்கிறார் என்றும், கர்நாடகாவில் அமைச்சராக இருக்கும் சிவக்குமார் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருக்கிறார் எனவும் மேற்கோள் காட்டிய கார்த்தி சிதம்பரம், அவர்கள் எல்லாம் இரண்டு பதவிகளில் இருக்கின்ற போது தன்னால் ஏன் இருக்க முடியாதா என தனது ஆசையையும், பேராசையையும் கட்சி மேலிடத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
அமலாக்கத்துறையை சட்டத்திற்குள் அடக்க வேண்டிய கடமை நீதிமன்றத்துக்கு தான் உள்ளது என்றும் அரசியலில் எதிரிகளை முடக்குவதற்கு பயன்படுத்தும் ஆயுதமாக அமலாக்கத்துறையை மத்திய அரசு வைத்திருப்பதாகவும் கார்த்தி சிதம்பரம் குற்றஞ்சாட்டினார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர்களை எந்தக் காலத்திலும் தாங்கள் மன்னிக்க மாட்டோம் என்றும் அதில் சமரசத்துக்கு இடமே இல்லை எனவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி எந்தக் கூட்டணியில் உள்ளதோ அந்தக் கூட்டணியை சிறுபான்மை சமுதாய மக்கள் நம்புகிறார்கள் என்றும் பாஜகவை விட்டு வெளியே வந்துவிட்டோம் என எடப்பாடி பழனிசாமி கூறுவதை எல்லாம் மக்கள் நம்பத் தயாராக இல்லை எனவும் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.












Click it and Unblock the Notifications