புதுக்கோட்டை சர்வேயர் எழில்கொடி ஓபனா கேட்டுட்டாங்க.. ஜிபே இல்லையாம்.. ரூ.2000 வேணுமாம்.. பாவம் விவசாயி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை சர்வேயர் எழில்கொடி, தன்னை நாடி வந்த விவசாயியிடம், "சீக்கிரம் வேலை முடிந்து விடும் என்றெல்லாம் சொல்ல முடியாது.. 1000 ரூபாய் எல்லாம் பத்தாது.. 2 ஆயிரம் ரூபாயாவது வேண்டும்" என்று ஓபனாகவே லஞ்சம் கேட்டுள்ளார்.. இப்படி லஞ்சம் கேட்பதை பாதிக்கப்பட்டவர் தரப்பில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்கள்.. இந்த வீடியோ சோஷியல் மீடியாவிலும் வைரலாகி கொண்டிருக்கிறது. என்ன நடந்தது?
புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அருகே உள்ளது ராயவயல் கிராமம்.. இங்கு வசித்து வரும் விவசாயி உருமையா. இவர் தனது மனைவியின் பெயரில் உள்ள விவசாய நிலத்தை பட்டா உட்பிரிவு செய்வதற்காக, புத்தாம்பூர் பகுதி சர்வேயர் எழில்கொடியை அணுகியுள்ளார்.

புதுக்கோட்டை விவசாயி
தனது நிலம் தொடர்பான பணிகளை முடித்து கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.. உடனே சர்வேயர் எழில்கொடி, லஞ்சம் தருமாறு விவசாயியை வற்புறுத்தியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, ஏற்கனவே சர்வேயர் எழில்கொடிக்கு உருமையா 2,000 ரூபாய் லஞ்சமாக கொடுத்துள்ளார்.
இருந்தாலும் எழில்கொடியின் பேராசை அத்துடன அடங்கவில்லை. பட்டா உட்பிரிவு வேலையை முழுமையாக முடித்துத் தருவதற்கு மேலும் 2,000 ரூபாய் வேண்டும் என்று அவர் விவசாயியிடம் கேட்டுள்ளார்.. அப்போது நடந்த உரையாடல் தான் வீடியோவாக வெளியாகி அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
சர்வேயர் எழில்கொடி
அந்த வீடியோவில் சர்வேயர் எழில்கொடி, மிகவும் அலட்சியமாகவும், அதேசமயம் அலர்ட்டாக இருப்பது போலவும் பேசியுள்ளார். "சீக்கிரம் வேலை முடிந்துவிடும் என்று சொல்ல முடியாது... எவ்வளவு காலம் ஆகும் என்றும் தெரியாது. தயவுசெய்து செல்போன்களை எடுத்துட்டு வராதீங்க.. அங்கேயே வைத்துவிடுங்கள். இப்போது யாரையும் நம்ப முடியவில்லை, ஏன், நம்ம கையைக்கூட நம்மால் நம்ப முடியவில்லை.
எனக்கு ஜிபே (GPay) கிடையாது. என் வீட்டில் இருக்கிறவர்களுக்கும் ஜிபே நம்பருக்கு பணம் அனுப்ப வேண்டாம். ஜிபேயில் பணம் வந்தால் நான் யாருக்கு அதை மாற்றுவது? காலம் இப்போ ரொம்ப மோசமாகிவிட்டது.. 1,000 ரூபாய் போதாது, கண்டிப்பாக 2,000 ரூபாய் கொடுத்தால் மட்டுமே காரியம் நடக்கும்" என்று அசால்ட்டாக பேசுகிறார்.
பாவம் அந்த விவசாயி
இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு, பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. ஒரு விவசாயிக்கு நியாயமான சேவைகூட கிடைக்காமல், இப்படி லஞ்சத்தை கேட்டு முடக்குவது நிலை வேதனையானது.
புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் ஏற்கனவே பலமுறை அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாகக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இது போன்ற ஒரு சம்பவம் நடந்திருப்பது அரசு நிர்வாகத்தின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.. உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட சர்வேயர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


Click it and Unblock the Notifications
