நான் அரசு வேலையில் இருக்கேன்னு சொல்லி தானே ரூ.1000 தரல! அந்த வேலை கொடுங்க போதும்! கூலி தொழிலாளி பரபர
புதுக்கோட்டை: உரிமை தொகை கிடைக்காத பெண் ஒருவர் தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என மேல்முறையீடு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தல் சமயத்தில் திமுக சார்பில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று உரிமை தொகை. அதற்கு அப்போதே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்தச் சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தத் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

விண்ணப்பங்கள் ரேஷன் கடைகள் மூலம் பெறப்பட்டு அவை பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி வாய்ந்த பெண்கள் சுமார் ஒரு கோடி பேருக்கு உரிமை தொகை வழங்கப்பட்டது. இருப்பினும், பெண்கள் சிலருக்கு உரிமை தொகை கிடைக்கவில்லை. உரிமை தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உரிமை தொகை: அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மேல்முறையீடு செய்துள்ளது அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடியை அடுத்துள்ள குலப்பெண்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சித்ரா. தமிழ்நாடு அரசு அறிவித்த உரிமை தொகை திட்டத்தில் இவரும் விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பம் பரிசீலனையில் இருந்த நிலையில், திடீரென அது நிராகரிக்கப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது.
ஏழ்மை நிலையில் இருந்த அந்த பெண் உரிமை தொகையைப் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்தார். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது அவருக்கு கடும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. இந்தச் சூழலில் தான் தகுதியுள்ள பெண்கள் தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகக் கருதினால் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இ சேவை மையத்தில் சென்று அவர் மேல்முறையீடு செய்தார். ஆனால், இந்த முறையும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அரசு வேலை கொடுங்க: அதிலும் விண்ணப்பம் நிராகரிக்கப்படக் கூறப்பட்டிருந்த காரணம் தான் அவரை அதிருப்தி அடைய வைத்தது. அதாவது குடும்பத்தில் ஒருவர் அரசு வேலையில் இருப்பதால் உரிமை தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக அதில் கூறப்பட்டிருந்தது. குடும்பத்தில் யாருமே அரசு வேலையில் இல்லாத போது எதற்காக இப்படி வந்துள்ளது என்று தெரியாமல் குழம்பிப் போனார். இதையடுத்து மக்கள் குறைதீர் நாள் கூட்டத்துக்கு வந்த அந்த பெண் இது தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
தனது கணவர் கூலி வேலை செய்து வரும் நிலையில், இருவரும் ஓட்டு வீட்டில் தான் வசித்து வருவதாகக் கூறினார். 100 நாள் திட்டத்தில் வேலை, கூலி வேலை எனச் செய்து வாழ்க்கையை ஓட்டி வரும் நிலையில், அரசு வேலை காரணமாக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். ரூ. 1000 உரிமை தொகையைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் அரசு வேலை தர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
என்ன பிரச்சினை: இதனால் அங்கே சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உரிமை தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கலெக்டர் உறுதியளித்தார். அதன் பிறகே இவர் சற்று அமைதியானார்.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "அவர்களின் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் பரிசீலனையிலேயே இருக்கிறது. ஆனால், தொழில்நுட்ப பிரச்சினையால் அவர்களுக்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டதாக மெசேஜ் போய்விட்டது. ஆனால், மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் பரிசீலனையில் தான் உள்ளது. குறிப்பிட்ட அந்த பெண்ணை அழைத்துப் பேசி தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications