ரவுடி சுள்ளான் மதன் பாணி.. புதுக்கோட்டையில் ரவுடி ரீல்ஸ் வெளியிட்டவரை தூக்கிய போலீஸ்
புதுக்கோட்டை: கீரமங்கலம் போலீசார் சமூக வளைத்தளங்களில் ரவுடிசத்தை பரப்பும் வகையில் ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றிய புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்
ரவுடி சுள்ளான் மதன் கொலைக்குப் பிறகு சமூக வளைத்தளங்களில் பதிவிடும் நபர்கள் மற்றும் அவர்களின் பின்னணி குறித்து போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கொத்தமங்கலம் ஊராட்சி சுண்டாங்கிவலசை பகுதியைச் சேர்ந்த காரையடிச்செல்வன் மகன் ராஜீவ்(28) என்ற நபர் தொடர்ந்து ரவுடிசத்தை பரப்பும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவுகளையும், ரீல்ஸ்களையும் பதிவேற்றி வந்ததை போலீசார் கண்காணித்துள்ளனர்.

பின்னர் அவரது இன்ஸ்டா அக்கவுண்டின் பழைய பதிவுகளை ஆய்வு செய்த போது அவர் பட்டாக் கத்தியோடு புகைப்படத்தை பதிவேற்றி இருந்ததை கண்டறிந்துள்ளனர் போலீசார். இதனையடுத்து அவரைக் கைது செய்த கீரமங்கலம் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அறந்தாங்கி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இளைஞர்களின் வாழ்க்கை தடம் மாறி விடாமல் இருக்க போலீசார் தொடர்ந்து இது போல சமூக வளைத்தளங்ஙளை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் பெற்றோர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த மாதம சிவகங்கையில் ரவுடி சுள்ளான் மதன் கொலையை தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் சமூக வலைதளங்களில் கொலை மிரட்டல்கள் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இத்தகைய கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட 36 சோசியல் மீடியா பக்கங்களை சிவகங்கை போலீசார் அப்போது அதிரடியாக முடக்கினார்கள்.
இது தொடர்பாக சிவகங்கை காவல்துறை அப்போது வெளியிட்ட அறிக்கையில், குறிப்பாக, "விரைவில் தலைகள் சிதறும்", "பழிக்கு பழி தொடரும்" போன்ற வாசகங்களுடன், மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டு வந்தது, சமூக வலைதள ஊடகப் பிரிவின் கண்காணிப்பின்போது கண்டறியப்பட்டு, மேற்கண்ட பதிவுகள் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட Instagram மற்றும் Facebook கணக்குகள் தொடர்பாக இன்று சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண்.82/26, மற்றும் 83/26 பிரிவு.196(1), 353(2) BNS-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 20 Instagram accounts, மற்றும் 1 Facebook account (blocked) முடக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களில் 36 சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி கொலை மிரட்டல் விடுப்பது, வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துக்களைப் பதிவிடுவது மற்றும் இரு தரப்பினரிடையே பகைமையை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும். இவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள், சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். சமூகத்தில் பதற்றம், வன்முறை அல்லது சட்டம்-ஒழுங்குப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் வகையிலான பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவோர் மீது, தொடர்புடைய BNS மற்றும் IT Act சட்டப் பிரிவுகளின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இளைஞர்கள் சமூக வலைதளங்களை ஆக்கப்பூர்வமான மற்றும் சமூக நலன் சார்ந்த செயல்பாடுகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும், சமூக நல்லிணக்கத்தையும் பொது அமைதியையும் பாதிக்கும் வகையிலான பதிவுகளைப் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும்." இவ்வாறு சிவகங்கை மாவட்ட காவல்துறை அப்போது எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications
