உயர்நீதிமன்ற கிளை உத்தரவின்படி! சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடல் இன்று தோண்டி எடுப்பு!

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுத்து அந்த இடத்திலேயே எக்ஸ்ரே எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ள நிலையில் அவரது உடல் இன்று தோண்டி எடுக்கப்படுகிறது. இதற்கு ஊடகங்களுக்கோ வேறு யாருக்குமோ அனுமதி அளிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியை சேர்ந்தவர் ஜகபர் அலி. இவர் முன்னாள் அதிமுக கவுன்சிலராக இருந்தார். இவர் சமூகம் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

pudukottai

இந்த நிலையில் திருமயம் தாலுக்காவில் கனிமவளக் கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரங்களுடன் பல முறை சென்று மனு கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அவருக்கு கனிம வளக் கொள்ளையர்களிடம் இருந்து அச்சுறுத்தல்கள் இருந்தனவாம்.

ஆனாலும் அவர் தொடர்ந்து மனுக்களை கொடுத்து வந்ததாக தெரிகிறது. அதாவது கனிமவளத்தை எடுக்க ஒரு இடத்தில் மட்டும் அனுமதி வாங்கிக் கொண்டு ஒதுக்கப்பட்ட இடங்களை காட்டிலும் பல்வேறு இடங்களில் இருந்து பல மடங்கு கனிமக் கொள்கை நடப்பதால் அரசுக்கு நஷ்டம் என்றும் ஜகபர் அலி புகார் அளித்து வந்தார்.

இந்த நிலையில் ஜனவரி 10ஆம் தேதி ஜகபர் அலி புதுக்கோட்டை கோட்டாட்சியரிடம் கனிமவளக் கொள்ளை தொடர்பாக புகார் மனு அளித்துள்ளார். அதில் சில குவாரிகளின் பெயர்களையும் அதற்கான ஆதாரங்களையும் ஜகபர் அலி வழங்கியதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஜனவரி 17ஆம் தேதி ஜகபர் அலி, பள்ளிவாசலில் தொழுகையை முடித்துக் கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி ஜகபர் அலியின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருமயம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜகபர் அலி விபத்தில் இறந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அப்போதுதான் கல்குவாரி சம்பந்தப்பட்ட நபர்கள் ஜகபர் அலியை திட்டமிட்டு கொலை செய்ததாக போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இறந்த ஜகபர் அலியின் மனைவி மரியம் கொடுத்த புகாரின் பேரில் குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் தினேஷ் குமார், லாரி உரிமையாளர் முருகானந்தம், ராமநாதபுரத்தை சேர்ந்த டிரைவர் காசிநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

காசிநாதன், விபத்தை ஏற்படுத்தி கொலை செய்வதற்காகவே அழைத்து வரப்பட்டாராம். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த குவாரி உரிமையாளர்களில் ஒருவரான ராமையா சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. கனிமவளக் கொள்ளை குறித்து புகார் அளித்ததற்காகவே ஜகபர் அலி கொலை செய்யப்பட்டார் என மனைவி மரியம் ஹைகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். மேலும் தனது கணவரின் பிரேத பரிசோதனை அறிக்கை இதுவரை வழங்கவில்லை என குற்றம்சாட்டினார்.

உடற்கூறு ஆய்வு தொடர்பான வீடியோ பதிவு கோரிய எங்களின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. 10 நாட்கள் தாமதத்திற்கு பிறகு உடற்கூராய்வு சான்றிதழ் வழங்கப்பட்டது. முதலில் நடந்த உடற்கூராய்வு உரிய விதிகளை பின்பற்றி நடத்தப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

எனவே ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுத்து இரு தடய அறிவியல் நிபுணர்களோடு எங்கள் நிபுணரையும் இணைத்து புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் உள்ளிட்டவைகளை எடுத்து வந்து மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும். அதை வீடியோ பதிவாக செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுத்து புதைத்த இடத்திலேயே எக்ஸ்ரே எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். உடலை எக்ஸ்ரே செய்யப்படுவது தொடர்பான எந்த புகைப்படமும் விசாரணைக்காக தவிர வேறு இடங்களில் பகிரப்படக் கூடாது. திருமயம் தாசில்தார் முன்னிலையில் ஜகபர் அலியின் உடல் புதைக்கப்பட்ட இடம் முழுவதும் மறைக்கப்பட்டு எக்ஸ்ரே எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இன்ற ஜகபர் அலியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு எக்ஸ்ரே எடுக்கப்படுகிறது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ பதிவாக எடுக்கப்பட்டு விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+