முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை! அமைச்சர் ரகுபதியை 2வது முறையாக சந்தித்த தமிமுன் அன்சாரி!
புதுக்கோட்டை: அமைச்சர் ரகுபதியை அவரது சுற்றுப்பயணத்திற்கு மத்தியில் 2வது முறையாக சந்தித்த மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலை குறித்து அரைமணி நேரத்துக்கு மேலாக பேசியிருக்கிறார்.
அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டி டூரில் இருந்த போதும் அவர் இருந்த மணமேல்குடிக்கே சென்று இந்த சந்திப்பை நிகழ்த்தியுள்ளார் தமிமுன் அன்சாரி.

20 ஆண்டுகளை கடந்த ஆயுள் தண்டனை கைதிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தார். ஆதிநாதன் ஆணைய பரிந்துரைகள் மற்றும் சட்ட வழிமுறைகள் குறித்தும் விவாதித்தார்.
கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனது கோரிக்கையை மனிதாபிமானத்துடன் பரிசீலிக்க வேண்டும் என்று கூறினார். அவருக்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, இது குறித்து கவனத்தில் கொண்டிருப்பதாகவும், சட்டப்பூர்வ நடவடிக்கையை திமுக அரசு மேற்கொள்ளும் என்றும் உறுதியளித்தார்.
முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை தொடர்பாக கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி சென்னையில் மஜக சார்பில் தலைமை செயலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அதேபோல் கோவை, மதுரை, நெல்லை, கடலூரில் சிறை நிரப்பும் போராட்டங்களும் நடத்தப்பட்டன.
தற்போது இதே கோரிக்கையை முன்னிறுத்தி செப்டம்பர் 27 அன்று சேலம் மத்திய சிறையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது.
அக்டோபர் 9 ஆம் தேதி சட்டசபை கூடுவதால் முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக தீர்மானம் கொண்டு வர வேண்டி, வேல்முருகன், திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களை கடந்த வாரம் முழுவதும் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார் அன்சாரி.
இதனிடையே நேற்றைய தினம் திமுக அரசு மீதான தனது ஏமாற்றத்தை கடிதமாகவே எழுதி அதை அமைச்சர் ரகுபதி வசம் கொடுத்தார் அன்சாரி. அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது; ''முஸ்லீம் ஆயுள் சிறைவசிகள் பற்றி ஏதும் அறிவிக்கப்படாதது ஏமாற்றத்தை உருவாக்கி உள்ளது. சமூக வழக்குகள் தொடர்புடைய கைதிகள் உள்ளிட்ட பலரின் விடுதலையில் பாரபட்சம் காட்டப்படுவதாக பரவலாக கருத்துள்ளது.
இவர்களின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவையில் 161 வது பிரிவை பயன்படுத்தி தமிழக அரசு ஒரு தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் .
இத்தீர்மானத்தை ஆளுநர் மறுத்தாலும், அது சட்டப் போராட்டத்திற்கு பெரிதும் உதவிகரமாக அமையும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
எனவே இதை வலியுறுத்தி அக்டோபர் 9 அன்று கூட விருக்கும் தமிழக சட்டப்பேரவை நிகழ்வுக்கு மத்தியில் ஒரு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றிட மாண்புமிகு தமிழக முதல்வரிடம் பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.'' இவ்வாறு தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications