விஜய் மாநாடு.. அரசியலில் இதெல்லாம் வழக்கம்தான்.. தம்ஸ்அப் காட்டிய திருமாவளவன்
புதுக்கோட்டை: அனைத்து அரசியல் கட்சிகளும் மாநாடு தொங்கும்போது பல்வேறு பிரச்னைகளை சந்திப்பது வழக்கம்தான். விஜயின் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விஜயின் அரசியல் பிரவேசம்தான் டாக் ஆஃப் தி டவுனாக உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்துவதற்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையே, தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வ பதிவுக்காகவுமே, நாம் இதுவரை காத்திருந்தோம். இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது. தமிழக வெற்றிக் கழகத்தை, அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்காக கடந்த பிப்ரவரி 2ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து இருந்தோம்.
அதைச் சட்டபூர்வமாகப் பரீசிலித்த தேர்தல் ஆணையம், தற்போது நம் தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்து, தேர்தல் அரசியலில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக பங்குபெற அனுமதி வழங்கியுள்ளனர். இச்சூழலில், நமது கழகத்தின் கொள்கை பிரகடன முதல் மாநில மாநாட்டுக்கான ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளது. அதுகுறித்த அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள் என்று கூறியுள்ளார்.
தவெகவின் மாநாட்டை வருகிற 23ம் தேதி விக்கரவாண்டியில் நடத்த முடிவு செய்திருந்தனர். ஆனால் காவல்துறை அனுமதி, ஜோதிடம் உள்ளிட்ட காரணங்களால் தேதி தள்ளிப் போகலாம் என்று தகவல் வெளியானது. தற்போது காவல்துறை மாநாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், விஜய் தன்னுடைய அறிக்கையில், "மாநாட்டுக்கான அதிகாப்ரபூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள்" என்று கூறியிருப்பதால், மாநாடு தேதி தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், புதுக்கோட்டையில் விசிக தலைவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: அரசுப் பள்ளிகளில் சனாதன சக்திகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சாளர் என்ற பெயரில் பலர் அரசு கல்வி நிறுவனங்களில் ஊடுருவி தம் கருத்துகளை திணித்து வருகின்றனர். அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய கருத்தை பேசிய மகாவிஷ்ணுவின் கைது சரியானதுதான்.
மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளிகளில் இதுபோன்ற மூடநம்பிக்கைகளை வளர்க்கும் செயல்கள் இருக்கக் கூடாது. இப்பிரச்னைக்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துக் கட்சிகளுமே மாநாடு தொடங்கும்போது இதுபோன்ற பிரச்னைகளை சந்திப்பது வழக்கம்தான். நடிகர் விஜய்யின் மாநாடு நடைபெறும். மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள்.
தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி விசிக சார்பில் அக்டோபர் 2 ஆம் தேதி மாநாடு நடைபெற உள்ளது. வெற்றிமாறன், ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் ஜாதிப் பெருமை பேசக்கூடிய படங்களை எடுப்பவர்கள் இல்லை.
ஜாதிய கட்டமைப்பை கேள்வி கேட்கும், விவாதத்துக்கு உள்ளாக்கும் படங்களைத்தான் எடுத்து வருகின்றனர். இதுதான் தற்போது ஜாதியவாதிகளுக்கு பிரச்னையாக உள்ளதே தவிர ரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றிமாறன் ஆகியோர் ஜாதியவாதத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள் இல்லை. சமூகத்தில் புரட்சிகர மாற்றம் எனும் வேட்கை அவர்களிடம் உள்ளது.
தமிழகத்தில் ஜாதி தொடர்பான பாகுபாடுகள் 99 சதவீதம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. ஒரு சதவீதத்தைதான் நாம் தற்போது பேசத் தொடங்கியுள்ளோம். இந்த விவாதத்தை இந்திய அளவில் விரிவாக்கமாக வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications