வலையில் திமிங்கலங்கள்? கோடி கோடியாக வீசி அமமுகவினரை விலைக்கு வாங்குகிறார் எடப்பாடி.. தினகரன் ஆவேசம்!
புதுக்கோட்டை: அதிமுகவில் ஆள் இல்லை என்பதால் கோடிகளை வாரி இறைத்து அமமுகவில் இருந்து ஆள் பிடிக்கும் வேலையில் எடப்பாடி பழனிசாமி இறங்கியுள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். பாஜக மேலிடத்துடன் தினகரன் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதைத் தொடர்ந்து, பாஜக தமிழ்நாட்டில் அமைக்கப்போகும் புது கூட்டணியில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோர் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அமமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர், தொடர்ச்சியாக அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அண்மையில் முன்னாள் எம்.எல்.ஏ உசிலம்பட்டி மனோகரன் அதிமுகவில் இணைந்தார். அமமுக நிர்வாகிகள் அதிமுகவுக்கு தாவி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி, அமமுகவினரை விலைக்கு வாங்கி வருகிறார் என்றும், துரோகமும் ஏமாற்று வேலையும் தான் அவரது அரசியல் நடைமுறை என டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இயக்கம், ஜெயலலிதாவால் கட்டிக்காத்து வளர்க்கப்பட்ட இயக்கம் இன்றைக்கு பலவீனம் அடைந்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இதனை மறைப்பதற்காக அமமுக உள்ளிட்ட பல கட்சிகளில் இருந்து பலரை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி அதிமுகவில் இணைத்து வருகின்றனர்.
யாரோ ஒருவர் செல்கிறார் என்பதற்காக அவர் சார்ந்த சமூகமே அவருடன் சென்றுவிடும் என்று பகல் கனவு காண்கிறார்கள். ஓபிஎஸ் இல்லாமல் அதிமுக வெற்றி பெற முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து டிசம்பர் அல்லது ஜனவரியில் அறிவிப்போம். எடப்பாடி பழனிச்சாமி, முதலில் வன்னியர்களை ஏமாற்றினார். அதன் பின்னர் ஒவ்வொருவராக ஏமாற்றி வருகிறார். அதேபோல தான் தற்போது சிறுபான்மையினர் மீது அக்கறை இருப்பது போல் நடித்து அவர்களை ஏமாற்றி வருகிறார்.
அதிமுகவுடன் அமமுக இணைவதை 90 சதவீத தொண்டர்கள் விரும்பவில்லை. எடப்பாடி பழனிசாமி இருக்கும் அவரை ஒன்றிணைய வாய்ப்பு இல்லை. எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து பயணிப்பதில் அமமுகவில் உள்ள யாருக்கும் விருப்பமில்லை. துரோகமும் ஏமாற்று வேலையும் தான் பழனிசாமியின் அரசியல் நடைமுறை" என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மேலும், "முன்னாள் அமைச்சர்களின் ஊழல் வழக்கு விசாரணை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். இதனை கால தாமதப்படுத்தும் விதமாக ஆளுநர் அதற்கான ஒப்புதலை கிடப்பில் போட்டிருந்தது தவறு. இதுபோல ஆளுநர் தாமதப்படுத்தினால் ஊழல் வழக்குகள் பெருகும் நிலை ஏற்படும். திமுக அரசு தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்" என டிடிவி.தினகரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications