"என்ன.. ஆறிப்போன டீயை கொடுக்குற..?" கொதித்து பேசிய மாமியார்.. வெறியான மருமகள்.. "ஒரே போடு" - ப்ச்
ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு கட்டிப்புரண்டு சண்டையிட தொடங்கினர்.
புதுக்கோட்டை: நாட்டில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால் மனதில் பயம் ஏற்படுவதை தடுக்க முடியவில்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அதுவும் உறவுகளுக்கு இடையே நடக்கும் கொலை பாதகங்கள் நம்மை பதற வைப்பதாகவே உள்ளன. அப்படியொரு சம்பவம்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரங்கேறி இருக்கிறது.
மாமியார் - மருமகள் இடையே சண்டை நடப்பதும், பிரச்சினை ஏற்படுவதும் வழக்கமானதுதான். ஆனால் இங்கு அற்ப விஷயம் ஒன்றுக்காக கொடூரமான காரியத்தை செய்திருக்கிறார் மருமகள் ஒருவர்.
புதுக்கோட்டையில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம் குறித்து இங்கு பார்ப்போம்.

மாமியார் - மருமகள் தகராறு
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ளது மலைக்குடிப்பட்டி என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு கனகு (42) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். சுப்பிரமணி அதே கிராமத்தில் விவசாயக் கூலியாக வேலை பார்த்து வருகிறார். சுப்பிரமணியுடன் அவரது தாயார் பழனியம்மாளும் (75) வசித்து வருகிறார். தனது கணவர் இறந்ததை அடுத்து கடந்த சில மாதங்களாகவே தனது மகனின் வீட்டில்தான் பழனியம்மாள் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த மாமியார் - மருமகள் உறவு சிறிது காலத்திலேயே கசந்து போயுள்ளது. இதனால் அடிக்கடி மாமியார் பழனியம்மாளுக்கும், மருமகள் கனகுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

டீ கேட்ட மாமியார்
தாயாருக்கும், மனைவிக்கும் இடையே ஏற்படும் இந்த தகராறை சுப்பிரமணிதான் தலையிட்டு சமாதானம் செய்து வந்துள்ளார். இந்த சூழலில், நேற்று இரவு வேலை முடித்து வந்த சுப்பிரமணி தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார். பின்னர் அனைவரும் உறங்கச் சென்றனர். இதனிடையே, இரவில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மாமியார் பழனியம்மாளுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இரவு 3 மணியளவில் மருமகளை எழுப்பிய பழனியம்மாள், தனக்கு சூடாக டீ போட்டு தருமாறு கூறியுள்ளார்.

"ஆறிப்போன டீயை கொடுக்குற.."
இதையடுத்து, பாதி தூக்கத்தில் எழுந்த கனகு, கிச்சனுக்கு சென்று டீ போட்டு கொண்டு வந்து கொடுத்தார். ஆனால், அந்த டீ சூடாக இல்லாமல் சற்று ஆறியிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பழனியம்மாள், "சூடாகதானே டீ கேட்டேன். என்ன ஆறிப்போன டீயை கொடுக்கிறாய்.. என்னை பார்த்தால் உனக்கு என்ன அவ்வளவு இளக்காரமா.." எனக் கேட்டுள்ளார். "நடு ராத்திரியில் உங்களுக்கு டீ போட்டு கொடுத்ததற்கு நன்றி கூறாமல் இப்படி பேசுகிறீர்களே.." என கனகு கேட்க, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வெறியான மருமகள்
ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு கட்டிப்புரண்டு சண்டையிட தொடங்கினர். அப்போது வீட்டில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து மாமியார் பழனியம்மாளின் தலையில் பலமாக அடித்துள்ளார் கனகு. இதில் தலையில் இருந்து அவருக்கு ரத்தம் கொட்டியது. இந்த சத்தத்தை கேட்ட சுப்பிரமணியும், அக்கம்பக்கத்தினரும் உடனே அங்கு வந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பழனியம்மாளை மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் இறந்து போனார். இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு வந்த இலுப்பூர் போலீஸார், மருமகள் கனகுவை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications