புனே அருகே துணி குடோனில் அதிகாலை பயங்கர தீ விபத்து.. தூங்கி கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் பலி
புனே: மகாராஷ்டிர மாநிலம் புனேவில் துணிக்கிடங்கு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
புனேவை அடுத்துள்ள உருளி டெவாச்சி என்ற கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான துணிக்கிடங்கு ஒன்று உள்ளது. இந்த குடோனில் தான் இன்று அதிகாலை எதிர்பாராதவிதமாக தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்து ஏற்பட்ட போது குடோனுக்குள் சில தொழிலாளர்கள் உறங்கி கொண்டு இருந்துள்ளனர். அதிகாலை நேரம் என்பதால் தொழிலாளர்கள் நல்ல உறக்கத்தில் இருந்துள்ளனர்.
குடோனின் ஒரு பகுதியில் இன்று அதிகாலை தீப்பிடித்தது. பின்னர் மற்ற பகுதிகளுக்கும் தீ மளமளவெனப் பரவியது. துணி பண்டல்கள் தீப்பிடித்து எரிந்தன.
உறக்கத்தில் இருந்ததால் தீ விபத்து ஏற்பட்டதை சட்டென்று உணர முடியாததால், சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறியும், தீக்காயம்பட்டும் 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்தில் சிக்கிய மேலும் சில தொழிலாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
