200 Km வேகத்தில் சீறிய போர்ஷே கார்! தொழிலதிபர் பையனாம்.. 2 உயிர் போச்சு! ஸ்டேஷனில் பீட்சா உபசரிப்பா?
புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தொழிலதிபரின் மகனான 17 வயது சிறுவன் அதிவேகமாக போர்ஷே காரை ஓட்டி சென்று இரண்டு பேரை கொன்ற வழக்கில் 14 மணி நேரத்தில் ஜாமின் பெற்றது கண்டனத்தை பெற்றது. இந்நிலையில் அந்தச் சிறுவனுக்கு காவல் நிலையத்தில் வைத்து பீட்சா பிரியாணி ஆகியவை வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது புனே போர்ஷே கார் விபத்து. ஏற்கனவே இது போன்ற பல சம்பவங்கள் இந்தியாவில் நடைபெற்று இருந்தாலும் இந்த வழக்கு பெரிய அளவில் பேசப்படுவதற்கு காரணம் அந்த சிறுவன் 14 மணி நேரத்தில் ஜாமினில் விடப்பட்டது தான்.

புனேவின் கல்யாணி நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 2 மணி அளவில் போர்ஷே சொகுசு காரில் அதிவேகமாக சிறுவன் சென்று கொண்டிருந்தான். 17 வயது தான் அந்த சிறுவனுக்கு இருக்கும் என கூறப்படுகிறது.
போர்ஷே கார் விபத்து: அளவுக்கு அதிக மது போதையில் போர்ஷே காரில் வேகமாக சென்ற பொழுது அந்த கார் இருசக்கர வாகனத்தில் சென்ற அனீஸ் மற்றும் அவரது நண்பர் அஸ்வினி ஆகியோர் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்தில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். மது போதையில் இருந்த அந்த சிறுவன் 200 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் அந்த காரை ஓட்டியது தெரியவந்த நிலையில் விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
14 மணி நேரத்தில் ஜாமீன்: இந்த நிலையில் காரை ஓட்டி வந்த அந்த சிறுவனின் தந்தை அப்பகுதியில் மிகப்பெரும் ரியல் எஸ்டேட் செய்து வரும் தொழிலதிபர் என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை என கடும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் விபத்தை ஏற்படுத்திய சிறுவனை விபத்து குறித்து கட்டுரை எழுத வேண்டும், போக்குவரத்து போலீஸுடன் சென்று 15 நாட்கள் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும், கெட்ட சிறுவர்களுடன் சேரக்கூடாது என பெற்றோர்களை அறிவுறுத்தி சிறார் நீதிமன்றம் 14 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கியது.
தந்தை கைது: இரண்டு உயிர்களை மது போதையில் கொன்ற சிறுவனுக்கு 14 மணி நேரத்தில் ஜாமின் வழங்கப்பட்டது எப்படி என பலத்த விமர்சனங்கள் எழுந்து நிலையில், சிறுவனுக்கு காரை கொடுத்தது எப்படி? அவனுக்கு மது வழங்கியது எப்படி? என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழ தொடங்கியது. இதைத் தொடர்ந்து சிறுவனின் தந்தையான விஷால் அகர்வால் மீது புனே காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்தவரை கைது செய்தனர்.
மது அருந்தும் வீடியோ: மேலும் சிறுவனுக்கு மது வழங்கியதற்காக பாரின் உரிமையாளர்களான பிரகல் ஹார்ட் பூட்டா, சச்சின் பட்கர், ஹோட்டல் பிளாக் நிறுவனத்தின் மேலாளர் சந்தீப் ஆகிய மூன்று பேரும் கைது செய்தனர். இந்த நிலையில் மது கூடத்தில் சிறுவன் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் பரபரப்பு புகார் எழுந்திருக்கிறது.
ஸ்டேஷனில் பீட்சா: சிறுவன் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் இருந்தபோது அவனது பெற்றோர் கோடீஸ்வரர்கள் என்பதால் புனே போலீசார் அந்த சிறுவனுக்கு பீட்சா பர்கர் பிரியாணி உள்ளிட்டவற்றை வழங்கியதாக சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு எம்பியான சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அஜித் பவாரின் என்சிபி கட்சி எம்எல்ஏ ஒருவரின் தலையீடும் இதில் இருக்கிறது என்றும் போலீஸ் கமிஷனரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தி இருக்கிறார். இது மட்டுமல்லாமல் பல்வேறு எதிர்க்கட்சிகளும் காவல்துறை மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் மீண்டும் தேசிய அளவில் பேசு பொருளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications