லஞ்சம் கொடுத்தால்தான் ஃபைல் நகர்கிறது.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பரபரப்பு பேச்சு!
புனே : அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்ததால்தான் கோப்புகள் விரைவாக நகர்கின்றன என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குற்றச்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளிப்படையான அணுகுமுறைக்கு பெயர் பெற்றவர். அவர், இந்தியாவின் அரசு அதிகாரிகள் பற்றி தெரிவித்துள்ள இந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள புனே பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் பொறியாளர் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது பேசிய நிதின் கட்கரி, “லஞ்சம் கொடுத்தால் தான் அதிகாரிகள் வேகமாக பணியாற்றுகின்றனர். இல்லாவிட்டால் ஒன்றும் நடக்காது. ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை என்ற நியூட்டனின் விதி போல் அரசு அதிகாரிகள் செயல்படுகின்றனர்.

சாலை விபத்துகள், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு நெடுஞ்சாலை திட்டங்களுக்கான தவறான திட்ட அறிக்கைகள் காரணமாக உள்ளன. நமது சிஸ்டத்தில் விஞ்ஞானி நியூட்டனுக்கே அப்பாக்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆவணங்கள் மேல் எடை (லஞ்சம்) வைத்தால் அது வேகமாக நகரும்.
நமது நாட்டில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும். பொதுப் பணித்துறைகளில் பணிகளை விரைந்து முடிக்க காலக்கெடு அவசியம். குறிப்பிட்ட கால கெடுவுக்குள் முடிவு எடுக்கும் முறை கொண்டு வர வேண்டும். தற்போது நடப்பதில் இருந்து இளைஞர்கள் பாடம் கற்க வேண்டும்.” எனப் பேசியுள்ளார்.
மேலும் பேசிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மும்பை மற்றும் பெங்களூர் நகரங்களை இணைக்கும் 14-வழி நெடுஞ்சாலையை அடல் சேது பாலத்தில் இருந்து தொடங்கி புனேவின் ரிங் ரோட்டுடன் இணைக்கும் வகையில் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார்.
இது மும்பையில் இருந்து பெங்களூர் செல்லும் பயணிகள் புனேவை பைபாஸ் செய்ய அனுமதிக்கும், இது நகரத்தில் போக்குவரத்தை குறைக்க உதவும். கூடுதலாக, இந்த சாலை சத்ரபதி சம்பாஜி நகருக்கு நேரடி அணுகலை வழங்கும். இந்த திட்டத்திற்கு ஏற்கனவே டெண்டர் விடப்பட்டுள்ளது, அடுத்த ஆறு மாதங்களுக்குள் கட்டுமானத்தை தொடங்க இலக்கு வைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார் நிதின் கட்கரி.


Click it and Unblock the Notifications
