"படகு பழுதாகிடுச்சுனு சொல்லியும் கேட்கல".. கச்சத்தீவு அருகே 8 ராமேஸ்வரம் மீனவர்கள் அதிரடி கைது
ராமநாதபுரம்: கச்சத்தீவு மற்றும் தனுஷ்கோடிக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 8 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை நள்ளிரவில் கைது செய்துள்ளது. சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அவர்களின் விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வழக்கமான அனுமதிச் சீட்டு பெற்று நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருக்கிறார்கள்..

மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் மன்னார் கடல் எல்லைக்கு இடையே மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இவர்களது படகைச் சுற்றி வளைத்து சோதனையிட்டனர்.
அப்போது எல்லை தாண்டி வந்ததாக மீனவர்கள் மீது குற்றச்சாட்டப்பட்ட நிலையில், இலங்கை கடற்படையினர் நடத்திய விசாரணையில், "தங்களின் படகு கோளாறு காரணமாகச் சேதமடைந்ததால் எதிர்பாராதவிதமாக எல்லை தாண்டி வர நேரிட்டது" என்று கைதான மீனவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இருந்தாலும் அவர்களின் வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ளாத இலங்கை கடற்படையினர், படகில் இருந்த 8 ராமேஸ்வரம் மீனவர்களையும் அதிகாரப்பூர்வமாகக் கைது செய்ததுடன் அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கரைக்கு அழைத்துச் சென்று அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்கள் 8 பேரையும் காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து, அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மீன்பிடித் தடைக்காலம் முடிந்து வாழ்வாதாரத்தை மீட்க கடலுக்கு சென்ற நிலையில், இத்தகைய அதிரடி கைது நடவடிக்கைகளும் படகுகள் பறிமுதலும் மீனவர்களின் வாழ்க்கையை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகையும் உடனடியாக மீட்கக் கோரி ராமேஸ்வரம் மீனவச் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக ராஜதந்திர ரீதியில் தலையிட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.


Click it and Unblock the Notifications
