பூர்வீக சொத்து அபகரிப்பு.. பத்திர பதிவாளருக்கும் தொடர்பு இருக்கு! நடிகை ஷர்மிலி சரமாரி குற்றச்சாட்டு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் தனது கணவருக்கு சொந்தமான பூர்வீக சொத்தை அபகரித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை ஷர்மிலி தெரிவித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், சொத்து அபகரிப்பு விவகாரத்தில் பத்திர பதிவாளர் உள்ளிட்ட பலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழில் வெளியான 'ஆவாரம்பூ' திரைப்படத்தில் நடிகர் கவுண்டமணிக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை ஷர்மிலி. தொடர்ந்து கவுண்டமணி, விவேக், வடிவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்ட முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது கணவருக்கு பூர்வீக சொத்து ராமநாதபுரம் அரண்மனை பகுதியில், கோட்டை வாசல் விநாயகர் கோயிலுக்கு எதிரே உள்ளது.

அந்த இடத்தில் மூன்று கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், 2017ஆம் ஆண்டு ராமநாதபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி பட்டாவைப் பயன்படுத்தி, அந்தச் சொத்து வேறொருவர் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டு அபகரிக்கபட்டதாக நடிகை ஷர்மிலி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஏற்கனவே மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கபடவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அந்த இடத்தில் புதிதாக உணவகம் ஒன்று திறக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற நடிகை ஷர்மிலி, தனது கணவருக்குச் சொந்தமான பூர்வீக சொத்தை மற்றவர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளதாகக் கூறினார். தொடர்ந்து நடிகை ஷர்மிலியின் புகார் அடிப்படையில் சுமார் 3 மாதங்களுக்கு பிறகு ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, வழக்குப்பதிவு தொடர்பான ஆணையைப் பெற்ற பின் நடிகை ஷர்மிலி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தங்களது புகாரின் மீது தற்போது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்த முதல்வர் ஜோசப் விஜய்க்கு நன்றி. வழக்குப்பதிவு செய்ததோடு விசாரணையை நிறுத்திவிடாமல், தங்களது பூர்வீக சொத்தை அபகரித்த நபர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து, இந்தச் சொத்து அபகரிப்பு விவகாரத்தில் பத்திர பதிவாளர் உள்ளிட்ட பலருக்கும் தொடர்பு இருக்கிறது. சம்பந்தப்பட்ட அனைவரிடமும் உரிய விசாரணை நடத்தி, குற்றச்சாட்டில் தொடர்பு உடையவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும். தங்களுக்குச் சொந்தமான பூர்வீக சொத்தை மீட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



Click it and Unblock the Notifications
