தேவர் ஜெயந்தி.. முதல்வர், அமைச்சர்களை வரவேற்ற கட்-அவுட்டுகள் கிழித்தெறியப்பட்டதால் பரபரப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்து ராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது. இங்கு தேவரின் 111வது ஜெயந்தி விழா மற்றும் 56வது குருபூஜை விழாவின் 3வது நாளான இன்று தேவர் குருபூஜை விழா நடைபெற்றது.
இதைமுன்னிட்டு மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினர்.

காலை 9 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், டாக்டர் மணிகண்டன், காமராஜ், ஓ.எஸ்.மணியன், டாக்டர் விஜயபாஸ்கர், பாஸ்கரன் மற்றும் அன்வர்ராஜா எம்.பி. உள்ளிட்ட பலர் அதில், பங்கேற்றனர்.
[18 தகுதி நீக்க எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றம் போனாலும் விடப்போவதில்லை.. அதிமுக கொறடா கேவியட் மனு ]
இதனிடையே முதலமைச்சர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோரை வரவேற்று அதிமுக கட்சியினர் சார்பில் பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. பசும்பொன் நோக்கி செல்லும் சாலைகளின் இருமருங்கிலும் இது போன்ற படங்களை பார்க்க முடிந்தது.

ஆனால் திடீரென மதிய நேரத்தில் அந்த பேனர்கள் கிழிக்கப்பட்டன. தள்ளிவிடப்பட்டன. அதிமுக கொடிக்கம்பங்கள் கூட சில இடங்களில் வெட்டி சாய்க்கப்பட்டன.
இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதிமுக யாருக்கு சொந்தம் என்பதில் டிடிவி தினகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணியினர் நடுவே, கடும் போட்டி இருந்து வரும் சூழ்நிலையில், இதுபோன்ற செயல் அரங்கேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. தென் மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் டி.ஐ.ஜி.க்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆளில்லா விமானம் மூலமும் கண்காணிப்பு பணி நடைபெற்றது. ஆனால், அதற்கு நடுவே இதுபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications