‛என்ன தம்பி துபாய் ரிட்டர்னா’.. கோட் சூட்டில் வந்தவரை கலாய்த்த ஓபிஎஸ்! கடைசி வார்த்தை தான் முக்கியம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். இன்றைய தேர்தல் பிரசாரத்தின்போது உச்சி வெயிலில் கோட் சூட் அணிந்து வந்தவரை பார்த்ததுமே சட்டென ஓ பன்னீர் செல்வம் கேள்வி கேட்டு கலாய்த்தார். அதன்பிறகு கடைசியில் ஓ பன்னீர் செல்வம் அவரை சமாதானம் செய்தார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர் செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். வரும் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் ஓ பன்னீர் செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

ஓ பன்னீர் செல்வத்திடம் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடும்படி கூறப்பட்டது. ஆனால் ஓ பன்னீர் செல்வம் மறுத்துவிட்டார். மேலும் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்தார். அதன்படி தேர்தல் ஆணையம் ஓ பன்னீர் செல்வத்துக்கு பலாப்பழ சின்னத்தை ஒதுக்கி உள்ளது.
இந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்பியாக வேண்டும் என்ற நோக்கத்தில் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ராமநாதபுரம் தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பலாப்பழ சின்னம் பொறிக்கப்பட்ட வாகனத்தில் அவர் கிராமங்களுக்கு சென்று வருகிறார். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஓ பன்னீர் செல்வம் திறந்த வேனில் நின்று வாக்கு சேகரித்தார்.
இந்த வேளையில் கோட் சூட், டை, கூலிங் கிளாஸ், ஷு அணிந்து விலையுயர்ந்த பைக்கில் ஒருவர் வந்தார். கொளுத்தும் வெயிலில் அவர் கோட் சூட் அணிந்து வந்ததால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மேலும் சாலையோரம் பைக்கை நிறுத்திய அந்த நபர், விறுவிறுவென ஓ பன்னீர் செல்வம் நின்று பேசிய பிரசார வாகனத்தை நோக்கி சென்றார்.
மேலும் பிரசார வாகனம் அருகே சென்ற நபர் ஓ பன்னீர் செல்வத்தை நோக்கி கையசைத்தார். அதை கவனித்த ஓ பன்னீர் செல்வம், ‛‛அய்யா எப்படி இந்த வெயில்ல கோட் போட்டுட்டு வர்றீங்க.. துபாயில இருந்தா வந்தீங்க'' என கேட்டார். அதற்கு அவர் பதில் சொல்லிய போதே ஓ பன்னீர் செல்வம், ‛‛தம்பி கோவிச்சிக்காதீங்க.. கோவிச்சிக்காதீங்க..'' என சமாதானம் செய்தார்.
ஓ பன்னீர் செல்வம் இப்படி செய்ததை பார்த்த பொதுமக்கள் குலுங்கி குலுங்கி சிரித்தனர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications