ஆடியோ வீடியோ பிரச்சனை அமித்ஷா கூட்டத்திலும்.. அண்ணாமலை சிரிப்பை கவனிச்சீங்களா? ராமேஸ்வரத்தில் கலகல
ராமநாதபுரம்: பாஜகவின் என் மண், என் மக்கள் என்ற பெயரிலான பாத யாத்திரை தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் அமித்ஷாவும் அண்ணாமலையும் அமர்ந்திருக்கும்போது கட்சி நிர்வாகி ஒருவர் ஆடியோ வருது, வீடியோ வரல என்று சொல்லும் காட்சி இணையதத்தில் பகிரப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என் மண்! என் மக்கள்! என்ற பெயரில் பாத யாத்திரையை நேற்று ராமேஸ்வரத்தில் தொடங்கினார். 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட வேண்டும் என்பது தமிழ்நாடு பாஜகவினரின் விருப்பம்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் பாஜகவின் ஆதரவை அதிகரிக்கும் வகையில் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து பாத யாத்திரையை தொடங்கி உள்ளார். இதில் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பாத யாத்திரையை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிலையில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.
இந்த நிகழ்வுக்காக ராமேஸ்வரத்தில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பல்லாயிரக்கணக்கானோர் அமரும் வகையில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. பல ஊர்களில் இருந்து இந்த விழாவில் கலந்துகொள்ள வேன்கள், பேருந்துகளில் பாஜகவினர் ராமேஸ்வரத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை புகழ்ந்து பேசியதுடன், தமிழ்நாடு அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். பொதுக்கூட்டம் முடிந்த பின்னர் அண்ணாமலையின் பாத யாத்திரையை தொடங்கி வைக்கும் விதமாக அமித்ஷாவும் சாலையில் இறங்கி அண்ணாமலையுடன் நடந்து சென்றார்.
மேடையில் நடக்கும் நிகழ்வுகளை பார்ப்பதற்கு எல்.இ.டி. திரைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு இருந்தன. இதற்கிடையே இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ அதிகளவில் எதிர்க்கட்சியினரால் பகிரப்பட்டு வருகிறது. அமித்ஷாவும், அண்ணாமலையும் அருகருகே மேடையில் அமர்ந்து இருக்கும்போது, எல்.இ.டி திரைகளில் ஆடியோ, வீடியோ இரண்டும் வரவில்லை என்று கூறப்பட்டது.
உடனே பாஜக நிர்வாகி ஒருவர், மேடையில் ஏறி நின்று, "ஆடியோ மட்டும் வருது.. வீடியோ பாருங்க. வீடியோ வருது.. ஆடியோ வரல. ஆடியோவும் வரலயாம். ஆடியோ, வீடியோ இரண்டையும் பாருங்க." என்று சொல்ல கூட்டத்திலிருந்தும் சத்தம் எழுந்தது. இதை பார்த்து அமித்ஷாவும் அண்ணாமலையும் சிரித்தனர்.
மீண்டும் மேடையில் பேசிய அந்த நிர்வாகி, "கொஞ்சம் சரி பண்ணி போடுங்க. முன்னாடியே ரெடி பண்ணி வைக்க சொன்னோம். அப்றம் போட்டு மாத்திட்டு இருக்கீங்க. கொஞ்சம் உடனடியாக போடுங்க." என்று சொல்லி, "அடுத்ததாக தமிழக பாஜக துணைத் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்களை வாழ்த்துரை வழங்க அழைக்கிறோம்." என்றார்.
அப்போது அண்ணாமலை, அமித்ஷா, எல்.முருகன் என மேடையில் அமர்ந்திருந்த நிர்வாகிகள் அடுத்து கை நீட்ட நயினார் நாகேந்திரன் வேறு திசைக்கு நகர்ந்து சென்றார். நேற்று இந்த நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று காலையிலேயே, "என் மண், என் மக்கள்" என்ற யாத்திரையின் பெயரை விமர்சிக்கும் வகையில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் "என் வீடியோ என் ஆடியோ" என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர். இந்த நிலையில் இந்த வீடியோவையும் அந்த ஹேஷ்டேக்கின் கீழ் பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications