பரமக்குடி நூலகத்திற்கு துபாய் தமிழர்கள் செய்த நெகிழ்ச்சியான உதவி.. குவியும் பாராட்டு!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செயல்பட்டு வரும் முழு நேர அரசு கிளை நூலகத்திற்கு, வளைகுடா நாடான துபாயில் வசிக்கும் தமிழர்கள் முன்வந்து நிதியுதவி செய்து தங்களை நூலகக் கொடையாளர்களாக இணைத்துக் கொண்டுள்ளனர். இந்த நற்செயல் அப்பகுதி மக்களிடையேயும் வாசகர்களிடையேயும் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.

துபாயில் இயங்கி வரும் பிரபல அல் ரீம் (Al Reem) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், இளையான்குடியைச் சேர்ந்த ஆர். செய்யது அபுதாஹிர் மற்றும் துபாயைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் ஆகிய இருவரும் இந்த நூலகத்திற்குத் தலா பத்தாயிரம் ரூபாய் (ரூ. 10,000) நிதி வழங்கியுள்ளனர். நூலகத்தின் வளர்ச்சிக்கும், அங்கு வரும் வாசகர்கள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்கும் உதவும் வகையில் இவர்கள் இந்த நிதியை வழங்கி, நூலகத்தின் அதிகாரப்பூர்வ கொடையாளர்களாக மாறியுள்ளனர்.

இத்துடன், பரமக்குடி இக்றா பதிப்பகத்தைச் சேர்ந்த எம். ஆமினா முஹம்மத் என்பவர், நூலகத்திற்குப் பயனுள்ள ஐந்து புதிய புத்தகங்களை இலவசமாக வழங்கினார்.

இந்த நன்கொடை மற்றும் புத்தகங்களை வழங்கும் நிகழ்ச்சி நூலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் துபாய் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் நேரில் கலந்து கொண்டு நன்கொடைத் தொகையையும் புத்தகங்களையும் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இராமநாதபுரம் மாவட்ட நூலக அலுவலர் மு.ப. கார்ல் மார்க்ஸ், பரமக்குடி நூலகர் கோ. சண்முகவேலு மற்றும் வாசகர் வட்ட தலைவர் வே. இராஜேந்திரன் ஆகியோர் இதனைப் பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில் நூலகப் பணியாளர்கள் க. இறையருட்பிரகாஷ், ந. ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டில் வேலை பார்த்தாலும், தங்கள் சொந்த மண்ணில் உள்ள நூலகம் மற்றும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகத் துபாய் தமிழர்கள் செய்துள்ள இந்த உதவி, பலருக்கும் ஒரு நல்ல முன்னுதாரணமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications
