லோக்சபா தேர்தல்.. பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு படையெடுக்கும் தலைவர்கள்.. மத்திய அமைச்சர்கள் வருகை?
ராமநாதபுரம்: 2024 ஆம் ஆண்டில் தேர்தல் நடைபெற இருப்பதால், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தேவர் குருபூஜையில் பங்கேற்று, மரியாதை செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் நிதின்கட்கரி ஆகியோரும் தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மூன்று நாட்கள் குருபூஜை நடைபெறுகிறது. முதல் நாள் ஆன்மிக விழாவாகவும், இரண்டாம் நாள் அரசியல் விழாவாகவும், மூன்றாம் நாள்அரசு விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. முதல் நாளான இன்று தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் தலைமையில் காலை 7.35 மணிக்கு கணபதி ஹோமம், லட்சார்ச்சனையுடன் ஆன்மிக விழா நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

இந்த நிலையில் 2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற இருப்பதால், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தேவர் குருபூஜையில் பங்கேற்று, மரியாதை செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின், சட்டசபை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்று மரியாதை செலுத்த உள்ளனர்.
பாஜக தலைவர் அண்ணாமலையும் பசும்பொன் வருகை தருவார் என்று கூறப்படும் நிலையில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் நிதின்கட்கரி ஆகியோரும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தென்மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர், ராமநாதபுரம் சரக டிஐஜி துரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டும், கமுதி முதல் பசும்பொன் வரை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டும் கண்காணிக்கப்படுகிறது. அசம்பாவிதங்களைத் தடுக்கவும், கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் பசும்பொன்னில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
தேவர் ஜெயந்தியின்போது பிரதமர் மோடி, முத்துராமலிங்கத் தேவரை நினைவுகூர்ந்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், 'மக்கள் நலனுக்காகவும், சமூக நீதிக்காகவும் வாழ்நாளை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்கத் தேவர். மிக உயர்ந்த துணிச்சலும், கனிவான உள்ளமும் கொண்டவர்' எனக் குறிப்பிட்டிருந்தார். கடந்த ஆண்டு பிரதமர் மோடி பசும்பொன் வந்து முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார் என்று தகவல் பரவியது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications