பரமக்குடி அரசு மருத்துவமனையில் ஜெயலலிதா போட்டோ.. டென்ஷனான அமைச்சர் மா.சு! தலைமை மருத்துவர் இடமாற்றம்
ராமநாதபுரம்: பரமக்குடி மாவட்ட மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்த போது அப்போது அங்கே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படங்களுடன் கூடிய போஸ்டர் இருந்ததைப் பார்த்து டென்ஷன் ஆனார். மேலும், ஆட்சி மாறி 3 வருடமாகியும் ஏன் இதை மாற்றவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அமைச்சர் மா சுப்பிரமணியன் அங்கே சென்றிருந்தார். முன்னதாக அவர் இன்று காலை நடைப்பயிற்சி சென்ற போது போகலூர் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார்.

ஆய்வு: அங்கே ஆரம்பச் சுகாதார நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வருகை பதிவேடு, அறுவை சிகிச்சை அரங்கம் ஆகியவற்றை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார். மேலும், அங்கே இதய பிரச்சனைக்கா சிகிச்சை பெற்றுக் குணமடைந்த நபரையும் போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். இந்த போகலூர் ஆரம்பச் சுகாதார மையத்தில் கடந்த நான்கு வருடங்களால் மகப்பேறு இறப்பு இல்லாமல் சுமார் 500க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடந்துள்ளன. இதனால் அங்கு பணிபுரியும் செவிலியர்களைப் பாராட்டிய அமைச்சர் மா சு, அவர்களுடன் தேநீர் அருந்தினார்.
அதைத் தொடர்ந்து அங்கிருந்து அவர் நேரடியாக பரமக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனைக்குச் சென்று அங்கு ஆய்வு செய்தார்.. பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் அரங்கில் ஏகப்பட்ட பழைய பொருட்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து அமைச்சர் மா சுப்பிமணியன், அங்கிருந்த ஊழியர்களிடம் இது சிடி ஸ்கேன் ரூமா அல்லது குடோனா எனக் கேள்வி எழுப்பினார்.
அறிவுரை: மேலும், சிடி ஸ்கேன் ரூமில் எதற்காக அட்டைகள், பேப்பர்கள் வைத்துள்ளீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார். அது அங்கிருந்த ஊழியர்கள் மருத்துவமனை தொடர்பான விண்ணப்பங்கள் எனப் பதிலளித்தனர்.. எதுவாக இருந்தாலும் அதை ஸ்கேன் ரூமில் வைக்கக் கூடாது. மெஷினில் தூசி படியும் என்று அமைச்சர் மா.சு அறிவுரை வழங்கினார்.
ஜெயலலிதா படம்: அங்கே மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் உள்ளே பல பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துடன் கூடிய போஸ்டர்கள் இருந்தன. இதைக் கண்டதும் டென்ஷனான அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆட்சி மாறி 3 வருஷம் ஆகிடுச்சு.. இன்னும் ஏன் இதை மாற்றாமல் வைத்துள்ளீர்கள் என கடிந்து கொண்டார்.
என்னது கவுன்சிலர் கண்ணீர் விட்டாங்களா? ஏங்க இதெல்லாம் ஒரு பேச்சா? எதிர் கேள்வி கேட்ட கேஎன் நேரு
தொடர்ந்து பரமக்குடி மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் ரூ. 47 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தையும் அவர் ஆய்வு செய்தார். இந்த கட்டுமான பணிகள் தொடங்கி 1.5 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் தரை தள பணிகள் கூட முடியவில்லை. இதைப் பார்த்த உடனே பொதுப் பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை பொறியாளரை போனில் தொடர்பு கொண்டு இது குறித்து கேள்வி எழுப்பினார்.
சரமாரி கேள்வி: கட்டுமான பணிகள் தொடங்கி 1.5 வருடமாகியும் ஏன் தரைதள பணிகள் கூட முடியவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார். இந்த வேகத்தில் போனால் 15 வருடம் ஆனாலும் கட்டிடத்தைக் கட்டி முடிக்க மாட்டார்கள் என்ற அவர், உடனடியாக ஒப்பந்ததாரரைக் கூப்பிட்டு விளக்கம் கேளுங்கள் என்றும் ஒப்பந்ததாரரைத் தேவைப்பட்டால் மாற்றுங்கள் எனக் கடிந்து பேசினார்.
இதற்கிடையே பரமக்குடி மாவட்ட மருத்துவமனையை உரிய முறையில் பராமரிக்கத் தவறியதற்காக அங்கிருந்த தலைமை மருத்துவரை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications