நேரில் சென்ற உதயநிதி.. ஸ்தம்பித்த பரமக்குடி.. இமானுவேல் சேகரன் நினைவு நாளில் ஸ்டாலின் போட்ட ட்வீட்!
ராமநாதபுரம்: தியாகி இமானுவேல் சேகரனாரின் 67-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரமக்குடிக்கு நேரில் சென்று இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அமெரிக்காவில் இருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், இமானுவேல் சேகரனாரை நினைவுகூர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இமானுவேல் சேகரின் திருவுருவப் படத்திற்கும், சிலைக்கும் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இராமநாதபுரத்தில் இமானுவேல் சேகரனாரின் திருவுருவப்படத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நேரில் சென்ற உதயநிதி: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்துவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றார். அங்கே அவருக்கு திமுகவினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பரமக்குடியில் அமைந்துள்ள இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், கேஆர் பெரியகருப்பன், பி.மூர்த்தி, கயல்விழி செல்வராஜ், மற்றும் நவாஸ் கனி எம்.பி., காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க நிர்வாகிகளும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

உதயநிதி பதிவு: தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், "விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாளான இன்று இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் சக அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுடன் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தோம்.
நாட்டு விடுதலைக்காவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரது பிறந்த நாளை, நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசு விழாவாக அறிவித்தார்கள். மேலும், திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவு மணி மண்டபத்தையும் நம் திராவிட மாடல் அரசு அமைத்து வருகிறது. சமத்துவம் படைக்க சமரசமற்ற போராளியாக வாழ்ந்து மறைந்த தியாகி இமானுவேல் சேகரனாரின் புகழ் ஓங்கட்டும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்: அமெரிக்காவில் இருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "தீண்டாமையை ஒழிக்கவும், சமூக விடுதலைக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களது நினைவு நாள் இன்று. நாட்டுக்காகவும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்துக்காகவும் உழைத்த அவரது வாழ்வைப் போற்றுவோம்! சமத்துவமும், சமூகநல்லிணக்கமும் மிளிர்ந்த சமூகத்தை நோக்கிய நமது பயணத்துக்கு அவரது தொண்டு உரமாகட்டும்!" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications