ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பறிபோன பிஞ்சு உயிர்! கண்ணீருடன் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் மருத்துவமனையில் போதிய கருவி இல்லை என்று கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த குழந்தையை கையில் ஏந்திக்கொண்டு கண்ணீருடன் அந்த குழந்தையின் தாத்தா, இந்த மருத்துவமனையில் 150 வகை நோய்களை கண்டறியும் கருவி இல்லையாம். அதை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைப்பதாக கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பாசிப்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது அசாருதீன்- நூருல் ஆஷிகா தம்பதி. இவர்களுக்கு கடந்த 16 ஆம் தேதி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன் தினம் இரவு குழந்தை அழுது கொண்டே இருந்ததால் ரத்த பரிசோதனை செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது. பின்னர் குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

Ramanathapuram Govt hospital

உறவினர்கள் முற்றுகை

ஏற்கனவே இதே மருத்துவமனையில் இந்த தம்பதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. அப்போது அந்த குழந்தை பிறந்து 7 நாட்களிலேயே மஞ்சள் காமாலையால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது 2-வது பிறந்த குழந்தையும் 5 நாட்களில் மஞ்சள் காமாலையால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

அலட்சியமாக இருந்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆஷிகாவின் தந்தை குழந்தையின் உடலை கையில் ஏந்திக்கொண்டு கண்ணீரோடு முதல்வர் விஜய்க்கு கோரிக்கை ஒன்றை வைத்தார். மேலும் நீதி கேட்டு அவர் பேசியதாவது:-

என் பேரக்குழந்தை இறந்துவிட்டது

தமிழ்நாடு முதல்வருக்கு நான் தெரிவித்துக்கொள்வது என்ன என்றால், இந்த பச்ச குழந்தை உயிரிழப்புக்கு போதிய கருவிகள் இந்த மருத்துவமனையில் இல்லையாம். ராமநாதபுரம் மாவட்டத்தில் மெடிக்கல் கல்லூரி மருத்துவமனையில் இந்த கருவி இல்லையாம். மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தும் இந்த கருவி வரவில்லை என்று சொல்கிறார்கள்.

என்னுடைய பேரக்குழந்தை இன்று இறந்துவிட்டது. இன்னும் எத்தனையோ குழந்தைகள் இதே ராமநாதபுரம் மருத்துவமனைக்கு சுற்றியுள்ள ஊர்களில் இருந்து வரலாம். இந்த கருவி இல்லை என்றால் எதற்கு இந்த மருத்துவமனை.. 150 வியாதிகளை கண்டறியும் கருவி இங்கே இல்லையாம். இந்த கருவி இருந்திருந்தால் என் பேரக்குழந்தை பிழைத்து இருக்கும் என மருத்துவர் சொல்கிறார்.

அதற்கான கருவி இல்லையாம்

பெரிய பெரிய மருத்துவர்கள் எல்லாம் என்ன சொல்கிறார்கள் என்றால், புரை ஏறி என் பேரக்குழந்தை உயிரிழந்து இருக்கலாம் என்று சொல்கிறார்கள். நன்கு பால் குடித்த பிள்ளைக்கு எப்படி புரை ஏறி இருக்கும் என கேட்டோம்.. நர்ஸ்கள் பால் கொடுத்து இருக்கலாம் என சொல்கிறார்கள்..

மஞ்சள் காமாலையின் அதிக தொற்றால் உயிரிழந்து இருக்கலாம் என்று சொல்கிறார்கள். உடனே நான் கேட்டேன்.. இதை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையா என்று.. அதற்கு அவர்கள் அதற்கான கருவிகள் இங்கு இல்லை என்று சொல்கிறார்கள். மத்திய அரசுவிடன் இந்த கருவியை கேட்டுக்கொண்டு இருக்கிறார்களாம். ஆனால் அவர்கள் இன்னும் கொடுக்கவில்லையாம்.

முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைக்கிறேன்

எனவே தமிழக முதல்வர் விஜய் இந்த கருவி கொண்டு வர நீங்க நடவடிக்கை எடுக்கனும். ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு நீங்க உதவி பண்ணனும். தமிழக முதல்வருக்கு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என் மகளுக்கு ஆபரேஷன் பண்ணியாச்சு. இனி குழந்தைகள் பிறக்க வாய்ப்பு இல்லை.. என்று கண்ணீருடன் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+