ராமநாதபுரம் ரேஞ்சே இனி வேற.. வந்தாச்சு ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி.. டெண்டர் கோரிய தமிழக அரசு!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசையில் ரூ. 42 கோடியில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி கட்டுமான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு. இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் அரியமான் அருகே பிரப்பன்வலசையில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி அமைக்கப்படும் என சட்டசபையில் துணை முதல்வரும், இளைஞர் நலன் விளையாட்டுதுறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் பட்ஜெட்டில் விளையாட்டுத்துறை தொடர்பாக ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, சென்னை, மதுரை, திருச்சி, நீலகிரி மாவட்டங்களில் 4 ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், கடல்சார் நீர் விளையாட்டுகளில் இளைஞர்களின் ஆர்வத்தை ஈர்க்கவும், நீர் விளையாட்டு போட்டிகளுக்கான உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பை ஏற்படுத்தவும் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாதமி, ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசையில் ரூ. 42 கோடியில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி கட்டுமான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்.
படகு நிறுத்தும் இடம், கட்டுப்பாட்டு மையம், வொர்க் ஷாப், உடற்பயிற்சி கூடம், யோகா மையம், பொருட்கள் வைக்கும் அறை, தங்கும் அறை, உணவுக் கூடம் ஆகியவை இந்த ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமியில் அமைய உள்ளன.
இதில் பாய்மரப்படகு, மரத்தான் நீச்சல் உள்ளிட்ட ஒலிம்பிக் நீர் விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு பணி ஆணை வழங்கிய நாளிலிருந்து, 18 மாதங்களுக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சர்வதேச தரத்தில், அதிநவீன கட்டமைப்புகளுடன் நீர் விளையாட்டு அகாடமி அமைந்தால், தமிழ்நாட்டில் நீர் விளையாட்டு வீரர்கள் அதிகளவில் உருவாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் காரணமாக, ராமநாதபுரம் மாவட்டம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கக்கூடும்.












Click it and Unblock the Notifications