கிஃப்ட் இருக்கு.. பூத் ஏஜென்ட்களுக்கு உறுதிகொடுத்த ஸ்டாலின்! அந்த வார்த்தைய சொன்னதுமே உற்சாக ஆரவாரம்
ராமநாதபுரம்: திமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஒரு முக்கியமான உறுதியை அளித்தார். அதைக் கேட்டு, அரங்கில் கூடியிருந்த 19 மாவட்டத்திற்குட்பட்ட நிர்வாகிகளும் உற்சாக ஆரவாரம் செய்தனர்.
2024 லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இன்று ராமநாதபுரத்தில் திமுகவின் தென் மண்டலத்திற்குட்பட்ட 19 மாவட்டங்களின் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம்: 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை திமுக தீவிரப்படுத்தி வருகிறது. 2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு - புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்ற பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அந்தவகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 65 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, திமுக வாக்குச்சாவடி முகவர்களின் பயிற்சி பாசறை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே டெல்டா மாவட்ட திமுக பூத் ஏஜெண்டுகள் கூட்டம் கடந்த மாதம் திருச்சியில் நடைபெற்ற நிலையில், இன்று ராமநாதபுரத்தில் திமுக பூத் ஏஜெண்டுகளுக்கான இரண்டாவது பயிற்சிப் பாசறை கூட்டம் நடைபெற்றது.
ஸ்டாலின் தீப்பொறி பேச்சு: இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்"நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுமைக்கும் நம்முடைய கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்தியாவின் கட்டமைப்பையே பாஜக ஆட்சி சின்னாபின்னம் ஆக்கிவிட்டது. இதற்கு 2024-இல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லை என்றால், இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பாஜக செய்து தரவில்லை. 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக மோடி சுட்ட பல வடைகள் தேர்தல் முடிந்ததோடு, ஊசிப் போனது. அது இப்போது எந்த நிலைமையில் இருக்கிறது என்று அவர்கள்தான் சொல்ல வேண்டும். இதுபோல் தமிழகத்துக்காக பல ஸ்பெஷல் வடைகள் சுடப்பட்டன.

நம்முடைய கொள்கை இந்திய ஒன்றிய ஆட்சியை வழிநடத்தும் கொள்கையாக மாற வேண்டும். அதற்கு தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளையும் நாம் கைப்பற்றியாக வேண்டும். அகில இந்தியா முழுமைக்கும் இந்தியா கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம். இந்தியாவைக் காப்பாற்றப் போவது இந்த INDIA கூட்டணிதான். இந்தியாவைக் காப்பாற்ற 'இந்தியா'வுக்கு வாக்களியுங்கள் என்பதுதான் நமது தேர்தல் முழக்கமாக அமையப்போகிறது.
நான் பார்த்துக்கிறேன்: பாஜகவினர் தங்களை எதிர்ப்பவர்களைப் பார்த்து Anti Indians என்று பழிசுமத்துவது வழக்கம். இப்போது இந்தியாவை எதிர்க்கும் Anti Indian-களாக பாஜகவினர் இருக்கிறார்கள். எனவே நமக்கு முன்னாள் உள்ள கனவு என்பது மிக மிகப்பெரியது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன். தேர்தல் வெற்றிக்கான களப்பணியை நீங்கள் பார்க்கவேண்டும்.
ஜனநாயகப் போர்க்களத்தில் முன்னணி வீரர்கள் நீங்கள். என்னுடைய போர்ப்படை தளபதிகள் நீங்கள். உங்களை நம்பி நாடாளுமன்றத் தேர்தல் களத்தை உங்களிடம் ஒப்படைத்துள்ளேன். எனது கடமையின் தூதுவர்களாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நீங்கள் தான் இருக்கப் போகிறீர்கள்.

நிச்சயமாக கிடைக்கும்- உறுதி அளித்த ஸ்டாலின்: உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரமும் முக்கியத்துவமும், கழகத்தில் உறுதியாக, நிச்சயமாக அண்ணா மீது ஆணையாக கிடைக்கும். கடமை கண்ணியம் கட்டுப்பாடு கொண்ட அண்ணாவின் தம்பியராய், கருணாநிதியின் உடன்பிறப்புகளாய் வென்று காட்டுவோம். உங்களில் ஒருவனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உங்களை நம்பி இந்தப் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறேன்" எனப் பேசினார்.
உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரமும் முக்கியத்துவமும், கழகத்தில் உறுதியாக அண்ணா மீது ஆணையாக கிடைக்கும் என முதல்வர் ஸ்டாலின் கூறியதும், அரங்கில் இருந்த ஆயிரக்கணக்கான பூத் கமிட்டி பொறுப்பாளர்களும் உற்சாக ஆரவாரம் செய்தனர். தேர்தலில் சிறப்பாக பணியாற்றும் பொறுப்பாளர்களுக்கு, தேர்தலுக்குப் பிறகு கட்சியில் முக்கிய பதவிகள், பொறுப்புகள் வழங்கப்படும் என்பதையே மு.க.ஸ்டாலின் உறுதிமொழியாக கொடுத்திருக்கிறார்கள் என்கின்றனர் திமுக உடன்பிறப்புகள்.












Click it and Unblock the Notifications