இந்தியாவுக்கு வார்னிங்.. இனி பாக்., தாக்கினால் சவுதி பதிலடி தரும்.. இருநாடுகள் இடையே டீல் கையெழுத்து
ரியாத்: சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையே பரஸ்பர பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதன்படி இனி பாகிஸ்தான் அல்லது சவுதி அரேபியா மீது யாராவது தாக்கினால் இருநாடுகள் மீதான தாக்குதலாக கருத்தில் கொள்ளப்படுவதோடு, இருநாடுகளும் இணைந்து பதிலடி கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் அந்த நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகள் இடையே பரஸ்பர பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம் என்னவென்றால் வெளிநாடுகளிடம் இருந்து இருநாடுகளை பாதுகாப்பதாகும். மேலும் வெளிநாடுகள் தாக்குதல் நடத்தும்போது இருநாடுகளும் சேர்ந்து பதிலடி கொடுப்பதை அடிப்படையாக கொண்டது.
பாகிஸ்தான் - சவுதி ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தம் மூலோபாய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் (Strategic Mutual Defence Agreement) என்று அழைக்கப்படுகிறது. அதாவது பாகிஸ்தான் மீதான எந்தவொரு தாக்குதலும் சவுதி அரேபியா மீதான தாக்குதலாக எடுத்து கொள்ளப்படும். அதேபோல் சவுதி அரேபியா மீதான எந்தவொரு தாக்குதலும் பாகிஸ்தான் மீதான தாக்குதலாக எடுத்து கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதிக்கு அணுஆயுத பாதுகாப்பு
மேலும் இஸ்லாமிய நாடுகளில் பாகிஸ்தானிடம் மட்டும் தான் அணுஆயுதம் உள்ளது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், வங்கதேசம், துருக்கி உள்பட வேறு எந்த இஸ்லாமிய நாடுகளிடமும் அணுஆயுதம் இல்லை.
இப்படியான சூழலில் இந்த ஒப்பந்தம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏனெ்னறால் சவுதி அரேபியா மீதான தாக்குதலுக்கு பதிலடியாக தேவையொன்றால் பாகிஸ்தான் தனது அணுஆயுதத்தை கூட பயன்படுத்த இந்த ஒப்பந்தத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவுக்கு வார்னிங்
இருப்பினும் எந்தெந்த நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும். எந்தெந்த நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படாது? என்பது பற்றிய விவரம் இந்த ஒப்பந்தத்தில் இல்லை. பொதுவாக இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால் இருநாடுகள் மீது யார் தாக்குதல் நடத்தினாலும் 2 நாடுகளும் கைகோர்க்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதில் சவுதி அரேபியா நம்மை சீண்டுவது இல்லை. நம் நாட்டுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. வர்த்தக பார்ட்னராக நமக்கு சவுதி அரேபியா உள்ளது. ஆனால் அந்த நாடு பாகிஸ்தானுடன் கைகோர்த்துள்ளது. அதோடு பாகிஸ்தான் மீதான தாக்குதல் தங்களின் நாடு மீதான தாக்குதலாக கருதப்படும் என்று ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்மூலம் பயங்கரவாதிகளுக்கு தீனி போட்டு வளர்த்து சதி வேலையில் ஈடுபடும் பாகிஸ்தானை நாம் தாக்கும்போது சவுதி அரேபியா நேரடியாக தலையீடும். பாகிஸ்தானுக்கு தேவையான உதவிகளை செய்யும். இது நம் நாட்டுக்கு வார்னிங் மெசேஜாக பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து மிரட்டும் பாகிஸ்தான்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே மாதம் 7 ம் தேதி முதல் 10ம் தேதி வரை நம் நாடு பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் பெரும் சேதத்தை சந்தித்தது. பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள், விமானப்படை தளம், ராணுவ தளம் உள்ளிட்டவை அழிக்கப்பட்டது.
அதன்பிறகு பாகிஸ்தான் நம்மிடம் கெஞ்சியதால் போர் நிறுத்தப்பட்டது. அதன்பிறகும் பாகிஸ்தான் நம்மை தொடர்ந்து சீண்டியது. சிந்து நதியின் குறுக்காக அணை கட்டினால் ஏவுகணையை ஏவி அழிப்போம் எனவும், பாகிஸ்தானை அழிக்க நினைத்தால் அணுஆயுத தாக்குதல் நடத்துவோம் உலகின் 50 சதவீதத்தை அழிப்போம் என்று பாகிஸ்தான் மிரட்டியது.
‛அரபு நேட்டோ’வை தொடர்ந்து பிரச்சனை
மேலும் நம் நாடு இன்னும் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை முடியவில்லை. பாகிஸ்தான் வாலாட்டினால் மீண்டும் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இப்படியான சூழலில் சவுதி அரேபியா - பாகிஸ்தான் இடையே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. நம் நாட்டுக்கு பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து கடந்த 15ம் தேதி கத்தார் தலைநகர் தோஹாவில் அரபு - இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் அவரச மீட்டிங்கை நடத்தினர். அப்போது இஸ்லாமிய நாடுகளை பாதுகாக்க நேட்டோ போல் ‛அரபு நேட்டோ' அமைப்பை தொடங்குவது பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திலும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பங்கேற்று ஆதரவு வழங்கினார்.
இஸ்லாமிய நாடுகளின் இந்த அமைப்பில் பாகிஸ்தான் இணையும்பட்சத்தில் அதுவும் நமக்கு பிரச்சனையாக மாற உள்ளது. ஏனென்றால் பாகிஸ்தான் நம்மை தாக்கும்போது நாம் பதிலடி கொடுத்தால் ‛அரபு நேட்டோ' உறுப்பு நாடான பாகிஸ்தானை தாக்கியதாக இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் சப்போர்ட்டுக்கு செல்லலாம். இதனால் தற்போது நம் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications