அப்பாவின் தோளில் தூங்கிய குழந்தை.. அடுத்த நொடி.. இப்படியா நடக்கனும்.. கோவை பஸ்சில் நேர்ந்த துயரம்
சேலம்: ஓடும் பஸ்சில் சென்று கொண்டிருந்த போது அப்பாவின் மடியில் அமர்ந்திருந்த குழந்தை தவறி பஸ்சுக்கு வெளியே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பஸ் டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் முன்பக்க படியின் வழியாக குழந்தை வெளியே விழுந்து உயிரிழந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் கருங்கல்லூர் பகுதியில் வசித்து வரும் கட்டிட தொழிலாளி ராஜதுரை. இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தையும், 9 மாதத்தில் நவநீஷ் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். கட்டிட வேலை செய்து வருவதால், ராஜதுரை கோவையில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.

கடந்த வாரம் ஊர் திருவிழாவிற்காக ராஜதுரை குடும்பத்துடன் சொந்த ஊர் சென்றார். பின்னர் நேற்று முன் தினம் இரவு அவர் கோவைக்கு திரும்பிக்கொண்டிருந்தார். சேலம் வந்த அவர் அங்கிருந்து கோவைக்கு பஸ்சில் நேற்று அதிகாலை வந்துகொண்டிருந்தார். அப்போது அவர் பஸ்சின் முன்படிக்கு முன்னால் உள்ள சீட்டில் மனைவி மகளுடன் அமர்ந்திருந்தார். 9 மாத குழந்தையை தோளில் வைத்தப்படி வந்துகொண்டிருந்தார்.
அப்போது பஸ் டிரைவர் திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது. இதில் தோளில் இருந்த குழந்தை நழுவி எதிர்பாராதவிதமாக பஸ்சின் படிக்கட்டு வழியாக கீழே சென்று விழுந்தது. உடனே பஸ் டிரைவரும் பஸ்சை நிறுத்தினார். இதனால் பதறித் துடித்த குழந்தையின் பெற்றோர் கீழே இறங்கி படுகாயத்துடன் கிடந்த குழந்தையை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களின் கண்களை கலங்க செய்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications