ஆம்னி பேருந்து அடிக்கடி நின்று போற இடம்.. சேலம் ஓட்டல் பாத்ரூமில் என்னப்பா அது.. அதிர்ந்த பெண்கள்
சேலம்: சேலம் சூரமங்கலம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் பெண்கள் பாத்ரூமின் மேல்பகுதியில் துணியில் சுற்றியபடி செல்போன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த செல்போன் மூலம் பெண்கள் குளிப்பதை இளைஞர் வீடியோ எடுத்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் சில ஓட்டல்களில் ஊழியர்கள் அல்லது அவர்களுக்கு நெருக்கமானவர்கள், தவறான மனநிலையுடன், பெண்கள் குளிக்கும் பாத்ரூமில் கேமராக்களை வைப்பது நடக்கிறது. அப்படி கேமராக்களை வைத்து படம் எடுக்கும் சிலர், கொஞ்ச நாளிலேயே மாட்டிக் கொள்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு எதிராக போலீசார் கடுமையான பிரிவுகளில் வழக்கு தொடர்கிறார்கள். இவர்கள் நீண்ட நாட்கள் சிறையில் தான் கழிக்க வேண்டியது வரும்.

எனினும் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதை சிலர் தொடர்ந்து வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.. எனவே ஓட்டல்களை அறை எடுத்த தங்குவோர் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். எல்லா ஓட்டல்களிலும் இதுபோன்று நடப்பது. மிக அபூர்வமாகவே இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கிறது. அப்படித்தான் சேலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்துள்ளது..
சேலம் சூரமங்கலம் மெயின் ரோட்டில் தனியார் ஓட்டல் ஒன்று செயல்படுகிறது. இந்த ஓட்டலில் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் ஆம்னி பேருந்துகள் மற்றும் டிராவல்ஸ் பேருந்துகள் சிறிது நேரம் நிறுத்தி செல்லப்படுவது வழக்கம். இந்த நிலையில் வியாழக்கிழமை அன்று ஒரு ஆம்னி பேருந்து ஓட்டல் முன்பு நின்றபோது பெண் பயணி ஒருவர் கீழே இறங்கி பாத்ரூமுக்குள் சென்றுள்ளார்.
இதையடுத்து அந்த பெண் திடீரென அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தார். கழிவறைக்குள் செல்போன் இருப்பதாகவும், அதன்மூலம் வீடியோ பதிவு செய்வதாகவும் ஓட்டல் முன்பு நின்று கொண்டிருந்த அந்த பெண் அழுதபடி கணவரிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் அளித்தார். அதன் பேரில் சூரமங்கலம் போலீசார் உடனடியாக அங்கு வந்து பார்த்தனர். அப்போது ஓட்டலில் உள்ள கழிவறையின் மேல்பகுதியில் துணியில் சுற்றியபடி செல்போன் ஒன்று இருப்பதும், அதனை எடுத்து பார்த்தபோது அந்த செல்போனில் வீடியோ பதிவாகி கொண்டிருப்பதும் உறுதியானது. சுமார் 1½ மணி நேரமாக அந்த செல்போனில் படம் பிடித்து கொண்டிருந்தது போலீசார் பார்த்த போது தெரியவந்தது.
இதையடுத்து ஓட்டல் பாத்ரூமுக்குள் செல்போன் வைத்தது யார்? அது யாருடையது? என்பது குறித்து ஓட்டலின் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் விசாரித்துள்ளனர். அதில் கழிவறையின் தூய்மை பணியாளரான கிச்சிப்பாளையத்தை சேர்ந்த 20 வயதாகும் விஜய் என்பவர் செல்போனை கழிவறையில் வைத்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய்யை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Click it and Unblock the Notifications
