ஆ ஊன்னா கொல்கத்தாவுக்கு ஏன் போகணும்.. கருணாநிதி பணியாற்றிய சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் உருவான கதை!
முன்னாள் முதல்வர் கருணாநிதி வசனகர்த்தாவாக பணியாற்றிய சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் உருவான கதை குறித்து பார்ப்போம்.
சேலம்: முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்ஜிஆருக்கு திருப்புமுனையாக இருந்த இடம்தான் மாடர்ன் தியேட்டர்ஸ்.
தமிழ்நாட்டில் சேலத்தில் ஏற்காடு சாலையில் உள்ளது மாடர்ன் தியேட்டர்ஸ். சேலத்திற்கு களஆய்வுக்காக சென்ற முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் இந்த தியேட்டரின் முகப்பில் நின்று செல்பி எடுத்துக் கொண்டார்.
இந்த மாடர்ன் தியேட்டர்ஸ், 150 படங்களுக்கு மேல் தயாரித்துள்ளது. தற்போது முதல்வர் எடுத்த செல்பி படம் வேகமாக பரவி வருகிறது. இநத் தியேட்டர்ஸின் முகப்பு புனரமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த தியேட்டர் குறித்த சிறப்பம்சங்களை பார்ப்போம்.

சேலத்தில் திருச்செங்கோடு
1935ஆம் ஆண்டு தமிழகத்தில் சேலத்தில் திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் (டிஆர்எஸ்) தொடங்கிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம்தான் மாடர்ன் தியேட்டர்ஸ். தென் இந்தியாவில் முதல்முறையாக உருவாக்கப்பட்ட பெரிய திரைப்படக் கூடம் இதுதான். இந்த மாடர்ன் தியேட்டர்ஸ் ஆண்டுக்கு 3 படங்களையாவது உருவாக்கிக் கொண்டிருந்தது. முதல் முறையாக வண்ண படம் தயாரித்த பெருமையும் இந்த தியேட்டர்ஸுக்கு உண்டு.

சினிமா தயாரிப்பு
சினிமா தயாரிப்பு என்றாலே கொல்கத்தாதான் என்ற நிலை இருந்தது. அதை தனது சினிமா தயாரிப்பு மீதான ஆர்வத்தால் மாற்றி காட்டினார் டி.ஆர்.எஸ். சினிமா தயாரிப்பு தொடர்பாக எல்லாவற்றுக்கும் கொல்கத்தா போக வேண்டியதாக இருந்த நிலையில் ஏன் சேலத்திலேயே ஒரு தியேட்டர்ஸை தொடங்கக் கூடாது என நினைத்து இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.

ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி
மாடர்ன் தியேட்டர்ஸில் ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி என்ற படம் எடுக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வசன ஆற்றலை பார்த்து வியந்த டிஆர்எஸ் தனது மாடர்ன் தியேட்டர்ஸில் வசனகர்த்தாவாக பணிபுரிய கருணாநிதிக்கு டிஆர்எஸ் அழைப்பு விடுத்தார். அதன்படி மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து கருணாநிதி கதை வசனம் எழுதிய படம் தான் மந்திரி குமாரி. இந்த படம் வெற்றி படமாக அமைந்தது.

திருப்புமுனை
கருணாநிதி, எம்ஜிஆர் என இருவரது வாழ்விலும் திருப்புமுனையை இந்த படம்தான் ஏற்படுத்தியது. தமிழில் முழுநீள வண்ண படத்தை தயாரிக்க முடிவு செய்த நிலையில் இந்த மாடர்ன் தியேட்டர்ஸில் தயாரிக்கப்பட்டதுதான் அலிபாபாவும் 40 திருடர்களும் . மாடர்ன் தியேட்டர்ஸின் 99ஆவது படமாக கொஞ்சும் குமரி தயாரிக்கப்பட்டிருந்தது. அதில் கதாநாயகியாக மனோரமா நடித்திருந்தார். அப்போது 1963 இல் டிஆர்எஸ் மாரடைப்பால் உயிரிழந்தார். அப்போது சூட்டிங்கில் இருந்த மனோரமா, மேக்கப்பை கூட கலைக்காமல் டிஆர்எஸ்ஸுக்கு அஞ்சலி செலுத்த சென்றார்.

136 படங்கள்
இந்த நிறுவனத்தில் இதுவரை 136 படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழ் மட்டும் 102 படங்களாகும். தெலுங்கில் 13 படங்களும் கன்னடத்தில் 4 படங்களும் மலையாளத்தில் 8 படங்களளும் சிங்களத்தில் 7 படங்களும் இந்தி, ஆங்கிலத்தில் தலா ஒரு படமும் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்டூடியோவில் முதல் இரட்டை வேட படமான உத்தமபுத்திரன் தயாரிக்கப்பட்டது. யானை, சிங்கங்களை வைத்து சாண்டோ சின்னப்பா தேவரும் பல படங்களை எடுத்துள்ளார்.

10 ஏக்கர்
சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் 10 ஏக்கர் நிலத்தை டி.,ஆர்.சுந்தரம் வாங்கியிருந்தார். இந்த ஸ்டூடியோவில் முழு படத்தையும் தயாரிக்கக் கூடிய அனைத்து வசதிகளையும் வைத்திருந்தார். படப்பிடிப்பு தளம், பாடல் பதிவு, திரைப்படத்தை போட்டு பார்க்க அரங்கம் என அனைத்து வசதிகளும் உள்ளது. இத்தகைய இந்த தியேட்டர் தற்போது புனரமைக்கப்பட்டு வருகிறது. டிஆர் சுந்தரம் வெளிநாட்டில் படித்தவர், தனது ஜவுளி தொழிலில் மகனும் கால்பதிப்பார் என டிஆர்எஸ்ஸின் தந்தை நினைத்திருந்த போது சினிமா மீது இருந்த ஆர்வம் காரணமாக தயாரிப்பு பக்கம் சென்றுவிட்டார்.












Click it and Unblock the Notifications