வாழை படம் தோற்றது.. கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா? செருப்பு கூட இல்லாத கொடுமை
சேலம்: மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலில் செருப்பு இல்லாமல் நடந்துள்ளேன்.. என்னுடைய பாதைகள் எல்லாம் முள்ளாக தான் இருந்தது.. அதை நான் முள்ளாக பார்க்கவில்லை எனவும், கடுமையான உழைப்பு இருந்தால் மட்டுமே அடுத்த நிலைக்குப் போக முடியும் என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் கூறியுள்ளார்.
சேலம் உடையாபட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்துகொண்டு மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றுகளை நடராஜன் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர்," எந்த விஷயத்தையும் தடையாக நினைக்க கூடாது. ஒரு வருஷம் என்னால் விளையாட முடியவில்லை. இப்பொழுது தான் வாழ்க்கை தொடங்கியது. ஆனால் அதற்குள் என்னுடைய வாழ்க்கை இப்படி ஆனது எனக்கு மிகப் பெரிய மன உளைச்சல் ஏற்பட்டது.
நல்ல நண்பர்கள் எப்பொழுதும் சுற்றி இருக்கும் பட்சத்தில் நல்லதே நடக்கும். நல்ல நண்பர்கள் நல்ல மனிதர்கள் என்னை சுற்றி கிடைத்தார்கள். நான் செய்கின்ற கடினமான உழைப்பு கடவுள் கொடுத்த வரம். தன்னம்பிக்கையோடு போராடியதால் எங்கெல்லாம் நான் துவண்டு போகிறேனோ அங்கெல்லாம் என்னை தோள் கொடுத்து தூக்கியவர்கள் நண்பர்கள் மற்றும் உடன் இருந்தவர்கள். சில பேருக்கு பாடல் கேட்பது பிடிக்கும்.. தனிமையில் அமர்ந்திருப்பது பிடிக்கும். ஆனால் எனக்கு சில நபர்கள் ஊக்கப்படுத்துதல் பிடிக்கும். வாழ்க்கையில் அதிக அளவில் கஷ்டப்பட்டு உள்ளேன்.
பேருந்துக்கு செல்ல கூட என்னிடம் பணம் இருக்காது. விளையாடி, விளையாட்டின் மூலம் வரும் பணத்தில் தான் கல்லூரி படிப்பை முடித்தேன். அனைவருக்கும் ஒரு திறமை உள்ளது. எனக்கு தெரிந்து நிறைய நபர்கள் தற்பொழுது விளையாட்டில் சாதித்துள்ளனர். மொபைல் போன் என்பது நம்முடைய தேவைக்கு மட்டும் தான் நம்மளை அடிமைப்படுத்தி விடக் கூடாது. அதனை ஒதுக்கி வைக்கப் பாருங்கள். ஒவ்வொரு படிக்கல்லும் ஒவ்வொரு முள் தான்.
நான் நடந்து வந்த பாதை எல்லாமே முள்ளாக தான் இருந்தது. நான் அதை முள் என்று நினைத்திருந்தால் இவ்வளவு தூரம் முன்னேறி இருக்க முடியாது. நான் படிகின்ற பொழுது பயிற்சி பெறுவதற்கு கூட இடம் கிடையாது. வெறும் காலில் மூன்று நான்கு வருடங்கள் ஓடி உள்ளேன். எனக்கு என்ன இருக்கிறதோ அதை வைத்து தான் நான் பயன்படுத்துவேன். விளையாட்டுத் துறையில் உள்ளவர்கள் நல்ல உணவு அருந்த வேண்டும் பல்வேறு உபகரணங்களை வாங்க வேண்டும் என்று கூறுவார்கள்.
எங்கள் வீட்டில் என்ன சமைக்கிறார்களோ அதுதான் நல்ல சாப்பாடு. அம்மா கையில் சாப்பிடுவது தான் என்னுடைய நல்ல சாப்பாடு. கடுமையான உழைப்பு இருந்தால் மட்டுமே அடுத்த நிலைமைக்கு போக முடியும். விளையாட்டாக இருந்தாலும் சரி, படிப்பாக இருந்தாலும் சரி, வேலைக்கு செல்பவராக இருந்தாலும் சரி தினமும் ஒரு மணி நேரமாவது விளையாட்டு மைதானத்தில் விளையாடுங்கள். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் உங்களுடைய குடும்பத்தை பார்த்துக் கொள்ள முடியும்" என பேசினார்.












Click it and Unblock the Notifications