பொங்கி வரும் காவிரி.. ஒரே ஆண்டில் 2-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை.. விவசாயிகள் ஹேப்பி
மேட்டூர்: நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதன் காரணமாக அணையின் உபரிநீர் 16 கண் மதகுகள் வழியாக 4500 கன அடி நீரும், அணை சுரங்க மின் நிலையம் மூலம் 21500 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியர் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், கேரளா, கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஒருசில நாட்களில் கனமழை கொட்டி தீர்க்கிறது. கடந்த ஒரு மாதமாக இடைவிடாமல் பெய்து வரும் மழையால் கர்நாடகாவில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பின.

கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் ஏற்கனவே நிரம்பிவிட்டன. இதனையடுத்து இரு அணைகளில் இருந்தும் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதேபோன்று தற்போதும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கர்நாடகாவில் இருந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக மீண்டும் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
ஏற்கனவே மேட்டூர் அணை 120 அடியை எட்டியிருந்தது. காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து அணையின் நீர் மட்டம் சற்று குறைந்தது. இந்த நிலையில் தான் நேற்று இரவு கர்நாடகாவின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதையடுத்து தான் மீண்டும் மேட்டூர் அணை நிரம்பியுள்ளது.
மதுரை, திண்டுக்கல் உள்பட 9 மாவட்டங்கள்.. இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அலர்ட்!
தற்போது மேட்டூர் அணை சுரங்க மின் நிலையம் மூலம் 21,500 கன அடி நீரும், 16 கண் மழைக்கால வெள்ளநீர் போக்கியில் 4,500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் அளவு அதிகரித்துள்ளதால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தெரிவித்துள்ளார்.
இதேபோன்று காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு நீர் வரத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. 23,000 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு காரணமாக நீர் வரத்தானது அதிகரித்துள்ளது. நீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டது. ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மற்றும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications