சேலத்தில் 4 மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் மீட்டிங்.. “சாதி கலவரங்கள் நடக்கவே கூடாது”: முதல்வர் ஆர்டர்!
சாதி கலவரங்கள் ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் : எந்தச் சூழ்நிலையிலும் சாதி கலவரங்கள் ஏற்படாதவாறு கண்காணிக்க வேண்டும், குற்றச் சம்பவங்களை தடுக்க போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து செயல்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கள ஆய்வில் முதலமைச்சர்
"கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற புதிய திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து சமீபத்தில் வேலூருக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் "கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்வதற்காக இன்று சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஸ்டாலின் விசிட்
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு பேருந்து நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின். அதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சார்ந்த தொழில் துறை மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் மற்றும் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் பயன்பெற்றுவரும் கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.

அதிகாரிகளுக்கு பாராட்டு
பின்னர், இன்று மாலை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களின் காவல்துறை உயர் அலுவலர்களுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சேலம் சரக மாவட்டங்களில் பல்வேறு சமூக குற்றங்களை தடுப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் சிறப்பான நடவடிக்கைகளுக்கு காவல் துறை கண்காணிப்பாளர்களுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

சாதி கலவரங்கள் நடக்கக்கூடாது
மேலும் இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது, எந்தச் சூழ்நிலையிலும் சாதி கலவரங்கள் ஏற்படாதவாறு கண்காணிக்க வேண்டும், குற்றச் சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து செயல்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும் கொலை, கொள்ளை, இணையவழி மோசடி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுப்பது பற்றியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

போலீசாருக்கு அட்வைஸ்
மேலும், காவல்துறையின் பணிகள் மக்கள் எளிதில் அணுகும் விதமாக இருக்கவேண்டும் என்றும், காவல் நிலையத்திற்கு மக்கள் எவ்வித அச்சமுமின்றி புகார் அளிக்க வரக்கூடிய சூழ்நிலையை, அமைப்பை ஏற்படுத்தவேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின், காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மக்களுக்கும், காவல்துறைக்குமான உறவு என்பது எளிமையானதாகவும், மனிதநேய அடிப்படையிலும் அமைய வேண்டும். காவல்துறை உயர் அலுவலர்கள் காட்டும் அணுகுமுறையைத் தான் அவர்களுக்குக் கீழ் பணிபுரியும் காவல் ஆய்வாளரும் மேற்கொள்வார் என்பதை எப்போதும் மனதில் கொள்ளவேண்டும் எனத் தெரிவித்தார்.

போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க
மேலும், போதைப்பொருள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் நிலையங்களில் காவல் கண்காணிப்பாளர்கள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பழைய வழக்குகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்றும், போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களைத் தடுக்க காவல்துறையினர் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாகத் தடுக்கவேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த ஆய்வுக்கூட்டம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், "எத்தனையோ அரசுப் பணிகள் இருந்தாலும், சமூகத்தில் காவல்துறையினருக்குக் கிடைக்கும் மரியாதை உயர்ந்தது. அந்தப் பெருமையும் மாண்பும் இன்னும் உயர தமிழ்நாடு காவல்துறையினர் உழைத்திட வேண்டும். காவல்துறை தங்களின் நண்பன் என்ற நம்பிக்கையோடுபொதுமக்கள் தங்கள் குறைகளைச் சொல்லுமளவிற்குக் கண்ணியத்துடன் உங்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். குற்றங்களைத் தடுப்பதோடு, குற்றம் நடக்காமலிருக்க விழிப்புணர்வையும் ஏற்படுத்திட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி காவல்துறை ஆய்வில் கேட்டுக் கொண்டேன். " எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications