Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புகையுது பெரியார் யூனிவர்சிட்டி.. சேலம் பதிவாளருக்கு பஞ்சப்படி, ஓய்வூதியம்! திமுக அரசுக்கு கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சேலம்: பண மோசடி உட்பட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் தங்கவேலுவிற்கு ஒரு லட்சம் ரூபாய் பஞ்சப்படியுடன் ஓய்வூதியம் வழங்க துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பதவி வகித்தவர் ஜெகநாதன்.. இங்கு பதிவாளராக பணியாற்றி வந்தவர் தங்கவேல். இவர்கள் இருவர் மீதும் பல்வேறு பணமோசடி முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்தன..

Salem Periyar university Ex Registrar pension issue and what did PMK Leader Anbumani say about DMK Government

மோசடிகள்: முக்கியமாக, "பியூட்டர்" பவுண்டேஷன் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி அதன் மூலம் பல தனியார் அமைப்புகளை இணைத்துக் கொண்டு கட்டிட டெண்டர் விடுவதில் அரசின் பணத்தை மோசடி செய்திருப்பதாக புகார்கள் எழுந்தன, இதுகுறித்த விசாரணையில், துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு, ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டார் என்றாலும், விசாரணை இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.

பெரும்பாலும், பதிவாகியிருக்கும் புகார்களில் பதிவாளர் தங்கவேலுவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டின் பேரில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பழனிசாமி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அளித்த அறிக்கையின்படி, தங்கவேலை சஸ்பெண்ட் செய்ய பல்கலைக்கழக துணைவேந்தருக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

ஓய்வூதியம்: கடந்த பிப்ரவரி 29-ம் தேதியுடன் தங்கவேல் ஓய்வு பெறவிருந்த நிலையில், பிப்ரவரி 13-ம் தேதியே, அவர் மெடிக்கல் லீவில் சென்றுவிட்டார்.. எனினும், அவர் பணி ஓய்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டுவிட்டது.. இப்போது, தங்கவேலுவிற்கு ஒரு லட்சம் ரூபாய் பஞ்சபடியுடன் சேர்த்து ஓய்வூதியம் வழங்க பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதான் மீண்டும் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.

துணைவேந்தர் ஜெகநாதனின் நடவடிக்கையை கண்டித்து வேலைநிறுத்தம் செய்ய பெரியார் பல்கலைகழக பேராசிரியர்கள், தொழிலாளர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். தங்கவேலு மீதான ஊழல் புகார்கள் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு அனைத்து ஓய்வூதியப் பலன்களையும் வழங்க ஆணையிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சங்கத்தினர், இதனை உடனடியாக ரத்து செய்யவும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

பாமக தலைவர்: இதேபோல, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும், துணைவேந்தரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் உள்ளதாவது:

பதிவாளர் பொறுப்பிலும், பேராசிரியர் பணியிலும் நீடிக்கத் தகுதியற்றவர் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு அனைத்து நடைமுறைகளையும், விதிகளையும் மீறி ஓய்வூதியமும், ஓய்வுக்கால பயன்களும் வழங்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

ஓய்வுக்கால பலன்கள்: பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகவோ, ஆசிரியர் அல்லாத பணிகளிலோ இருந்து ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதியமும், ஓஒய்வுக்கால பயன்களும் வழங்கப்படுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. ஓய்வு பெற்றவருக்கு எதிராக நீதிமன்றங்களில் எந்த வழக்கும் நிலுவையில் இருக்கக் கூடாது, எந்த விசாரணையும் நிலுவையில் இருக்கக் கூடாது, உள்ளாட்சித் தணிக்கைத் தடை எதுவும் நிலுவையில் இருக்கக் கூடாது ஆகியவைவே அந்த விதிமுறைகள்.

முனைவர் தங்கவேலுவுக்கு எதிராக நீதிமன்ற வழக்கு, விசாரணை, தணிக்கைத் தடை ஆகிய மூன்றும் நிலுவையில் உள்ளன. ஆனால், இவை அனைத்தையும் தாண்டி முனைவர் தங்கவேலுவுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.

தணிக்கை துறை: ஒரு பேராசிரியர் ஓய்வு பெற்ற பிறகு அவர் குறித்த அனைத்து விவரங்களும் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறைக்கு அனுப்பப்பட வேண்டும். அத்துறை சார்பில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு ஒப்புதல் அளித்த பிறகு தான் ஓய்வூதியமும், ஓய்வுக்கால பயன்களும் வழங்கப்பட வேண்டும். ஆனால், தங்கவேலு விவகாரத்தில் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையின் சார்பில் இதுவரை தணிக்கை செய்யப்பட வில்லை.

உள்ளாட்சி நிதித்தணிக்கைத் துறையின் பிரதிநிதியாக பல்கலைக்கழகத்தில் நிதி அலுவலராக பணியாற்றிய சரவணக் குமார் என்பவர் தங்கவேலுவுக்கு ஓய்வூதியம் வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், அவரை நெருக்கடி கொடுத்து இட மாற்றம் செய்யச் செய்து விட்டு, தற்காலிக நிதி அலுவலரை நியமித்து ஓய்வூதியம் வழங்க துணைவேந்தர் ஏற்பாடு செய்துள்ளார். இது சட்டவிரோதம் ஆகும்.

பணிக்கால விவரம்: அண்மையில் நடைபெற்ற பெரியார் பல்கலைக்கழகத்தின் 114-ஆம் ஆட்சிக்குழு கூட்டத்தில் தங்கவேலு ஓய்வு பெற்ற பிறகு, அவரது பணிக்கால விவரங்களை உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை மூலம் தணிக்கை செய்த பிறகு தான் ஓய்வூதியம் உள்ளிட்ட பயன்களை வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், அத்தீர்மானத்தை மதிக்காமல் முனைவர் தங்கவேலுவிடம் பிரமாணப்பத்திரம் பெற்று அவருக்கு ஓய்வுக்கால பயன்களை துணைவேந்தர் வழங்கியுள்ளார். இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

முனைவர் தங்கவேலு மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனாலும், அவரை பணியிடை நீக்கம் செய்யாமல் கடந்த பிப்ரவரி 29-ஆம் நாள் ஓய்வு பெற அனுமதித்த துணைவேந்தர் இப்போது ஓய்வுக்கால பயன்களையும் வழங்க ஆணையிட்டிருப்பது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும்.

ஓய்வூதியம்: பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி ஓய்வுபெற்ற தமிழ்மாறன் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர். அவர் ஓய்வு பெற்று 5 ஆண்டுகளாகியும் இதுவரை அவருக்கு ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்படவில்லை. இதழியல் துறைத் தலைவர் நடராசன் ஓய்வு பெற்று 4 ஆண்டுகள் ஆகியும் அவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.

இதேபோல் பலர் ஓய்வூதியம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் 5 ஆண்டுகளுக்கும் மேலாகியும் ஓய்வூதியம் வழங்காத துணைவேந்தர், தங்கவேலுவுக்கு மட்டும் 50 நாட்களில் ஓய்வூதியம் வழங்கி ஆணையிட்டுள்ளார். இதற்கு காரணம் துணைவேந்தர் செய்த அனைத்து விதிமீறலுக்கும் அவர் துணையாக இருந்தது தான்.

அலட்சியம்: பல்கலைக்கழக விதிகளையும், தமிழக அரசின் ஆணைகளையும் மதிக்காமல் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் செயல்படுவதற்கு காரணம் தமிழக அரசின் அலட்சியம் தான். தமிழக அரசால் அமைக்கப்பட்ட பழனிச்சாமி விசாரணைக் குழுவில் துணைவேந்தர் மீதான பல குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழக அரசு நினைத்திருந்தால் துணைவேந்தரை பணி நீக்கம் செய்திருக்க முடியும்.

ஆனால், அதை செய்யாத தமிழக அரசு, அந்த அறிக்கையை ஆளுனருக்கு அனுப்பி விட்டு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருக்கிறது. அதனால் தான் அரசுக்கு சவால் விடும் அளவுக்கு துணைவேந்தருக்கு துணிச்சல் வந்துள்ளது.

பணிநீக்கம்: தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை பணி நீக்கம் செய்ய வேண்டும். பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில் பொறுப்புக்குழு அமைக்க வேண்டும். முனைவர் தங்கவேலுவுக்கு ஓய்வூதியம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று கேட்டுக் கொண்டுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+