சேலத்தில் விஜய் பேசிக் கொண்டிருந்த போதே! வெயிலில் மயங்கி விழுந்த வடமாநில இளைஞர் பலி! கதறிய குடும்பம்
சேலம்: சேலத்தில் விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே பட்டறைத் தொழிலாளி சூரஜ் (37) என்பவர் திடீரென மயங்கி விழுந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இறந்த சூரஜின் உடலை பார்த்து அவரது மனைவியும் குழந்தைகளும் கண்ணீர் விட்டு கதறிய காட்சி காண்போரை கலங்கச் செய்துள்ளது.
சேலம் சீலநாயக்கன்பட்டி கேவிபி கார்டனில் தவெக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்காக காலை 10 மணி முதலே நிர்வாகிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு நாற்காலிகள் வழங்கப்படவில்லை. தண்ணீர் மற்றும் ஜூஸ் பாட்டில்கள் வழங்கப்பட்டபோதிலும், 3 மணி நேரம் வெயிலில் நின்றிருந்தனர்.

இந்நிலையில் விஜய் மதியம் 1 மணிக்கு வந்தார். விஜய்யைப் பார்த்ததும் அனைவரும் ஆரவாரம் செய்தனர். அப்போது விஜய் பேசத் தொடங்கினார். அவர், "நான் ஏற்கெனவே சொன்னது போல, களம் (தேர்தல் களம்) ரொம்ப சூடாக இருக்கிறது. இங்கு ரெண்டே ரெண்டு கட்சிகளுக்குத்தான் போட்டி! ஒன்று TVK, இன்னொன்று DMK! நான் சொல்றது புரியுதா?" என்று கேள்வி எழுப்பினார்.
மயங்கி விழுந்த சூரஜ்
விஜய் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோதே, அங்கிருந்த 4-5 பேர் வெயிலின் கொடுமையால் மயங்கி விழுந்தனர். அவர்களில் வடமாநில இளைஞர் சூரஜும் மயங்கி விழுந்தார். உடனே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
சூரஜ் யார்?
சூரஜ், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர். சேலத்தில் வெள்ளிப் பட்டறைத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். சேலத்தில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி பிரியங்கா (32). திருமணமாகி 12 ஆண்டுகளாகின்றன. இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகளும் 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
8000 பேர்
இந்த சேலம் கூட்டத்தில் 5,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டிருந்த நிலையில், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒரு கட்டத்தில் பாஸ் இல்லாமலேயே பலர் அத்துமீறி உள்ளே நுழைந்ததாகத் தெரிகிறது.
அதுபோல, நண்பர் ஒருவரின் பாஸை பெற்றுக் கொண்டு உள்ளே சென்ற சூரஜும் ஒருவர் என்று கூறப்படுகிறது. சூரஜுக்கு ஏற்கெனவே இதயக் கோளாறு இருந்தது. கடந்த ஆண்டு அதற்கான சிகிச்சை பெற்றிருந்ததாக சொல்லப்படும் நிலையில் இன்று வெயிலின் கொடுமையால் 3 மணி நேரம் ஒரே இடத்தில் நின்றதால் மயங்கி விழுந்து வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என அவரது நண்பர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். ஆனால் பலர் அவருக்கு ஏற்கெனவே உடல்நல பாதிப்பு இருந்ததாக தவறான தகவலை பரப்பி வருவதாகவும் வேதனை தெரிவித்தனர்.
கரூர் சம்பவம்: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக பொதுக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தவெக பொதுக் கூட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
விதிகள்
முட்டுச் சந்து போல் இல்லாமல் பெரிய திறந்தவெளி மைதானங்களில் பெட்டிகள் அமைக்கப்பட்டு அதில் ஒரு பெட்டிக்கு இத்தனை பேரைத்தான் அனுமதிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த சேலம் கூட்டத்திற்கு கூட கர்ப்பிணிகள், குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது. தண்ணீர் உள்ளிட்டவை கொடுக்கப்பட வேண்டும். ஆம்புலன்ஸ், மருத்துவ குழு அமைக்கப்பட வேண்டும் போன்று 51 விதிகளுடன் சேலத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஒருவர் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஒரு சடலம்
மேலும் இந்த மாநாட்டுத் திடலுக்கு அருகே ஒரு சடலம் கிடைத்துள்ளது. உயிரிழந்தவர் யார் என போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர் மாநாட்டுக்கு வந்தவரா, யார் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications