டோக்கன் கொடுத்தீங்க.. அதிமுகவுக்கு ஓட்டு போட்டோம்.. மளிகை சாமான் வரல.. போராட குவிந்த பெண்கள்
சேலம்: எத்தனையோ வகையான போராட்டங்களை தமிழகம் பார்த்துள்ளது. ஹிந்தி திணிப்பு போராட்டம், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம் என இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த போராட்டங்கள் பல.
Recommended Video
ஆனால், இப்போதெல்லாம் நிலைமை மாறிப்போச்சு. போட்ட ஓட்டுக்கு பணம் கொடுக்காத வேட்பாளரை எதிர்த்து போராட்டம் செய்துள்ளனர் மக்கள்.
நமது தமிழகத்தில்தான் இப்படியும் நடந்துள்ளது.

ஏற்காடு சட்டசபை தொகுதி
சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் சித்ரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், பிரச்சாரத்தின்போது இவர் நூதனமாக ஒரு வேலையை செய்துள்ளார். ஆர்.கே.நகரில் நடந்ததே அதே டெக்னிக்தான் இதுவும்.

டோக்கன் வினியோகம்
ஆம்.. ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட அயோத்தியபட்டினம் பேரூராட்சி பகுதியில் அதிமுகவினர் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கியுள்ளனர். சித்ராவை வெற்றிபெறச் செய்தால் தலா 2000 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் வீடு தேடி வரும் என உறுதியளித்துள்ளனர்.

மளிகைக்கு ஆசைப்பட்ட மக்கள்
இப்போது சித்ரா வெற்றியும் பெற்றுவிட்டார். மளிகை ஜாமானுக்கு ஆசைப்பட்ட மக்கள் போட்ட ஓட்டு இதில் முக்கிய பங்காற்றியிருக்க கூடும் என்கிறார்கள் பிற கட்சியினர். ஆனால் அவர் கூறியது போல எந்த ஒரு மளிகை பொருட்களும் வந்து கொடுக்கவில்லையாம்.

கோபத்தை பாருங்க
இதனால், மக்களுக்கு வந்ததே பாருங்க ஒரு கோபம். அதிலும், அதிகமாக கோபத்தால் பொங்கியது தொகுதியிலுள்ள பெண்கள்தானாம். உடனே அயோத்தியாபட்டினம் பகுதியில் குவிந்துவிட்டனர். சித்ரா சார்பில் கொடுத்ததாக கூறப்படும் டோக்கனை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்கள் போராட்டம்
வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் நன்றி தெரிவிக்ககூட வரவில்லை. தற்போது நாங்கள் ஊரடங்கு காரணமாக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த காலகட்டத்தில் நிவாரண பொருட்களை கூட வழங்காமல் எங்களை ஏமாற்றுகிறார் எம்எல்ஏ, என்று போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் கூறினர். அதிமுக சட்டமன்ற உறுப்பினரை கண்டித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications