இந்தியா vs சிங்கப்பூர்.. "வரி செலுத்தினாலும் இங்கு மரியாதை இல்லை.." பொங்கி எழுந்த தொழிலதிபர்
சிங்கப்பூர்: சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் வசித்த நபர், இந்தியாவில் வரி செலுத்தும் மக்களுக்கு கூட அடிப்படை சேவைகள் போதியளவு கிடைப்பதில்லை என ஏமாற்றம் தெரிவித்துள்ளார். தரம் மோசமாக இருப்பதாலேயே பெரும்பாலான மக்கள் அரசு பள்ளிகளை விட்டுவிட்டு தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதாகவும் அவர் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இப்போது ரூ.12 லட்ச ரூபாய் வரை சம்பாதிப்போருக்கு வரி இல்லை. அதற்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு மட்டுமே வருமான வரி வசூலிக்கப்படுகிறது. வருமான வரிக்கு தான் இப்படியே தவிர ஜிஎஸ்டி, கலால் உள்ளிட்ட மறைமுக வரிகளாக நாம் அனைவருமே வரிகளை செலுத்தி தான் வருகிறோம். வரி செலுத்தும் அளவுக்கு நமக்கு பலன் கிடைக்கிறதா என்ற விவாதம் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது.

தொழிலதிபர் கருத்து
இதற்கிடையே சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வாழ்ந்து, அங்கு வரி செலுத்திய அனுபவத்தை இந்தியாவுடன் ஒப்பிட்டு தொழில்முனைவோர் அங்கித் கேடியா ஒரு போஸ்ட்டை பகிர்ந்துள்ளார். அவரது போஸ்ட் இப்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "என் பெற்றோர் இந்தியாவில் வசிக்கிறார்கள். ஆனால் நான் சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் வாழ்ந்து வேலை செய்துள்ளேன். அந்த நாடுகளில் வரியும் கட்டியுள்ளேன்.
இந்த ஆண்டு 6 கோடி இந்தியர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்து, வரி செலுத்தியுள்ளனர். ஆனால் மக்கள் செலுத்தும் வரிக்கு கிடைக்கும் பலனில் இந்தியா தான் மிகவும் பின்தங்கியதாக எனக்கு தோன்றுகிறது" என்று பதிவிட்டுள்ளார். மேலும், ஏன் இதுபோல சொல்கிறேன் என்பதை விளக்கும் வகையில் காரணங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.
போதிய வசதி இல்லை
அதில் அவர், "காற்று சுத்தமாக இல்லை. குடிநீர் பாதுகாப்பாக இல்லை. ஒவ்வொரு பருவமழையிலும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்குகின்றன. அரசு மருத்துவ சேவைகள் மீது முழு நம்பிக்கை வைக்க முடியவில்லை. பெரும்பாலான குடும்பங்களின் முதல் தேர்வாக அரசு பள்ளிகள் இல்லை. இவை அனைத்தும் வரி செலுத்தும் மக்களுக்கு அடிப்படை உரிமைகளாக கிடைக்க வேண்டிய சேவைகள்.
இதர நாடுகள்
அதிக வரி விதிக்கும் பல முன்னேறிய நாடுகளிலும் மக்கள் அதற்கேற்ற தரமான பொது சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை தருகின்றன. பல முன்னேறிய நாடுகளில் 30 முதல் 40 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டியிருக்கும். சில நாடுகளில் வருமான வரி மிகவும் குறைவாகவோ அல்லது இல்லாமலோ கூட இருக்கலாம். ஆனால் அதிக வரி வசூலிக்கப்படும் நாடுகள், தங்கள் மக்களுக்கு தரமான சாலைகள், சுகாதாரம், கல்வி உள்ளிட்டவற்றை தருகிறது. இந்தியாவில் அது போதுமான அளவுக்கு இல்லை என்பதே எனது நிலைப்பாடு. எதிர்காலத்தில் இந்த நிலை மாறும் என்று நம்புகிறேன்" என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்கள்
அவரது பதிவு சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.. ஒரு தரப்பு நெட்டிசன்கள், "இந்தியாவில் வாழ்க்கைத் தரம் இன்னும் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேறவில்லை என்று நினைக்கிறோம் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அங்கேயே தொடர்வது நல்லது" என்று சாடியுள்ளார். அதேநேரம் இன்னும் சிலர் இவரது கருத்தை ஆமோதிக்கும் வகையில் பதிவிட்டுள்ளனர். அவர்கள், "வரி செலுத்திய பிறகும் அரசு அலுவலகங்களில் மக்கள் நடத்தப்படும் விதம் ஏமாற்றமளிக்கிறது. எந்தவொரு அரசு அலுவலகங்களிலும் மரியாதை இல்லாமல் நடத்தப்படுகிறோம்" என்று ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சிலர் இந்தியாவின் வரி அமைப்பில் மாற்றங்கள் தேவை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஜிஎஸ்டி இன்புட் வரிச்சலுகை விரைவாக வழங்கப்பட வேண்டும் என்றும் நிலுவையில் உள்ள வரி வழக்குகள் விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
