சிங்கப்பூரில் குழந்தை பெற்றால் ரூ.53 லட்சம்.. சொந்த வீடும் கிடைக்குமாம்! அரசு அதிரடிக்கு என்ன காரணம்
சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாட்டு பிரதமர் ஒரு சூப்பரான அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.. இதைக்கேள்விப்பட்டு உலக நாடுகள் புருவத்தை உயர்த்தி வருகின்றன.. ஆம், குழந்தை பிறப்பு விகிதம் வரலாறு காணாத வகையில் 0.87 ஆகக் குறைந்துள்ள நிலையில், பிறப்பை அதிகரிக்க அந்நாட்டு அரசு புதிய குடும்ப ஆதரவுத் திட்டங்களை அறிவித்துள்ளது.. மானியம், சொந்தமாக வீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்து, பலரது கவனத்தை பெற்று வருகிறது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும், நவீன வாழ்க்கையிலும் மூழ்கியுள்ள பல நாடுகளுக்கு மத்தியில், மனிதவளப் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் சிங்கப்பூர் திணறி கொண்டிருக்கிறது..

சிங்கப்பூர் அரசு
அதிலும் குறிப்பாக, அந்நாட்டின் கருத்தரிப்பு விகிதம் வரலாற்று சாதனை அளவாக வெறும் 0.87 என்ற மிகக் குறைந்த நிலைக்கு சரிந்து விட்டது.. இந்த விவகாரத்தில்தான் சிங்கப்பூர் அரசாங்கம் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
மக்கள் தொகையை பெருக்குவதற்காக அந்த நாட்டு பிரதமர் லாரன்ஸ் வாங் ஒரு குடும்ப ஆதரவுத் திட்டத்தை அதிரடியாக அறிவித்துள்ளார். அதன்படி சிங்கப்பூரில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் 17 வயது வரை பல்வேறு கட்டங்களாக 70,000 சிங்கப்பூர் டாலர் நிதியுதவியாக வழங்கப்படவுள்ளது. இது நம்ம ஊர் மதிப்பில் மொத்தம் சுமார் 53 லட்சம் ரூபாயாகும்.. இந்த அறிவிப்பு இளம் தம்பதியினர் மத்தியில் பெரும் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மானியம், சொந்த வீடு
குறிப்பாக, கடந்த 1970-களில் "2 குழந்தைகளே போதும்" என்று பிரச்சாரம் செய்து குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்த அதே சிங்கப்பூர் அரசு, இன்று மக்கள் தொகை சரிவைத் தடுக்க அதற்கு நேர்மாறான முடிவை எடுத்திருப்பது வரலாற்றுத் திருப்பமாகவே பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் சிறப்பம்சமாக, குழந்தை பிறந்தவுடன் கைச்செலவுக்காக உடனடியாக சுமார் 7.5 லட்சம் ரூபாய் பேபி கிஃப்ட்டாக வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அந்த குழந்தைக்கு 17 வயது அடையும் வரை ஆண்டுதோறும் தலா 1.5 லட்சம் ரூபாய் பெற்றோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரொக்கப் பரிசு, பராமரிப்பு செலவுகள்
வெறும் ரொக்கப் பரிசுடன் மட்டும் இந்த திட்டம் நின்றுவிடவில்லை; குழந்தை பராமரிப்பு செலவுகளை குறைப்பதற்கான மானியங்கள், பெற்றோருக்கான கூடுதல் விடுப்பு மற்றும் சொந்தமாக வீடு வாங்குவதற்கான சிறப்புச் சலுகைகள் போன்ற அத்தனை வசதிகளும் இந்தத் தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன.
ஒரு நாட்டின் எதிர்காலம் என்பது அங்கே பிறக்கும் இளம் தலைமுறையின் கைகளில்தான் உள்ளது என்பதை உணர்ந்து, சிங்கப்பூர் அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. எகிறி கொண்டிருக்கும் பொருளாதார சுமையால் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடும் தம்பதியினருக்கு அரசாங்கமே முழு பாதுகாப்பாக நின்று அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்துள்ளது.
அரசின் இந்த அறிவிப்பு, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, வேலை அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் பண உதவிகள் மட்டும் பிறப்பு விகிதத்தை உயர்த்துமா என்பது தெரியவில்லை.. ஆனால், சிங்கப்பூரின் இந்த அறிவிப்பு, உலக நாடுகளை மிரள வைத்துக் கொண்டிருக்கிறது...!!!


Click it and Unblock the Notifications
