கையில் இருந்தது வெறும் 20 டாலர்.. ஆனால் இன்று ரூ.100+ கோடி பிஸ்னஸ்! சிங்கப்பூர் பெண்ணின் கதை
சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் வெறும் 20 டாலரை கையில் வைத்து கொண்டு பிஸ்னஸை ஆரம்பித்துள்ளார். ஆனால், இன்று 1.5 கோடி சிங்கப்பூர் டாலருக்கு அதிபதியாக இருக்கிறார். இவரது வெற்றிக்கதை என்ன? இவர் கடந்து வந்த பாதை குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!
சிங்கப்பூரை சேர்ந்த தொழில்முனைவோர் மிஸா நசிலி. தனது வெற்றிக்கு பின்னால் மறைந்திருந்த போராட்டங்கள் குறித்து இவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள போஸ்ட் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. வெளியில் தெரியும் வெற்றியை மட்டும் பார்த்து மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட வேண்டாம் என்றும் ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னாலும் 1000 தோல்விகள், தியாகங்கள் மற்றும் கடின உழைப்பு இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் தொழிலதிபர்
தற்போது புதிய போர்ஷே கார் வைத்திருப்பதாகவும், தான் நடத்தி வரும் ஐந்து நிறுவனங்கள் இந்த ஆண்டில் மொத்தமாக 1.5 கோடி சிங்கப்பூர் டாலருக்கும் (S$15 மில்லியன்) அதிக வருமானத்தை ஈட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனது நிறுவனங்களை கவனிக்க சுமார் ஆறு மாடி தலைமை கட்டிடத்தை கட்டி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..
தியாகங்கள்
அதேநேரம் இந்த வெற்றி தனக்கு ஒரே நாளில் கிடைக்கவில்லை என்றும் இதற்கு பின்னால் பல கடுமையான தியாகங்களும் மோசமான தோல்விகளும் இருப்பதாகவும் அவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "நான் ஒரு காலத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தேன். அப்போது திடீரென என்னை வேலையை விட்டு நீக்கிவிட்டார்கள். அப்போது தான் நான் முதலில் எனது சொந்த பிஸ்னஸை தொடங்கினேன். இருப்பினும், அது அனைத்துமே தோல்வியில் முடிந்தது. கடும் நஷ்டத்தை எதிர்கொண்டேன்.
20 டாலர்
அப்போது எனது வங்கி கணக்கில் வெறும் 20 சிங்கப்பூர் டாலர் (சுமார் ரூ.1,300) மட்டுமே இருந்தது. அது மட்டுமல்லாமல், பிஸ்னஸில் ஏற்பட்ட நஷ்டத்தால் சுமார் 80,000 சிங்கப்பூர் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.50 லட்சத்துக்கும் மேல்) கடனில் சிக்கிக் கொண்டு இருந்தேன். ஆனாலும் மனம் தளராமல் புதிய பிஸ்னஸ் ஆரம்பித்தேன். அப்போது பொருட்களை எடுத்து செல்ல வண்டிக்கு கூலி தர கூட போதிய பணம் இருக்காது. நானே எனது பொருட்களை சுமந்து வந்தேன்.
வெற்றி எனக்கு ஈஸியாக கிடைக்கவில்லை. எனது பொருட்களை எடுத்துக் கொண்டு முதன்முறையாக ஒரு பெரிய ரீடெய்ல் நிறுவனத்தை அணுகினேன். ஆனால், அவர்கள் எனது பொருட்களை வாங்க ரெடியாக இல்லை. தொடர்ந்து முயற்சி செய்தேன். கொஞ்சம் கொஞ்சமாக எனது பொருட்களை மக்கள் வாங்க ஆரம்பித்தனர். இப்போது எனது பொருட்கள் சிங்கப்பூரில் உள்ள 100க்கும் மேற்பட்ட கடைகளில் விற்கப்படுகிறது.
நெட்டிசன்கள்
இன்று பலரும் என்னை பல நிறுவனங்களை நடத்தும் ஒரு சிஇஓவாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால், பெற்றோரின் ஏமாற்றத்தை சந்தித்த பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்ட மாணவியை அவர்கள் பார்க்கவில்லை. ஒவ்வொரு வெற்றிக் கதைக்கும் ஒரு தொடக்கம் இருக்கும். மற்றவர்களின் வெற்றியைப் பார்த்து உங்களை ஒப்பிடாதீர்கள். உங்கள் பயணத்தில் நீங்கள் எவ்வளவு முன்னேறியிருக்கிறீர்கள் என்பதை மட்டும் பாருங்கள்"என்ற அவரது போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இவரது இந்த போஸ்ட் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications
