பெரும்சோகம்.. லாரி மோதி நொறுங்கிய கார்.. தந்தையோடு 2 வயது குழந்தை உள்பட 3 பேர் துடிதுடித்து பலி
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் இன்று மாலையில் லாரியும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் அதில் பயணித்த 2 வயது குழந்தை உள்பட 3 பேர் உடல் நசுங்கி துடிதுடித்து பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே உள்ள வாகைகுடி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் கரூரில் உணவு விடுதி நடத்தி வருகிறார். இந்நிலையில் தான் கணேசன் உணவு விடுதியில் இருந்து இன்று காரில் வாகைகுடி நோக்கில் வந்து கொண்டிருந்தார்.

காரில் கணேசனின் மகள் 2 வயது மகள் அபிநயா, கொழுந்தியாள் மகள் சபிதா (வயது 18) உள்ளிட்டோர் இருந்தனர். கணேசனின் கார் சிவகங்கை மாவட்டம் சங்கரபதி கோட்டை அருகே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக நெடுஞ்சாலையில் கணேசனின் காரும், எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டது. இதில் கார் நொறுங்கியது. காரில் பயணித்த கணேசன், அவரது மகள் அபிநயா மற்றும் உறவுக்கார பெண் சபிதா ஆகியோர் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடினார்கள்.
இதை பார்த்தவுடன் அந்த சாலையில் சென்றவர்கள் வாகனத்தை நிறுத்தி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது காரில் பயணித்த கணேசன், மகள் அபிநயா மற்றும் சபிதா ஆகியோர் இறந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் சிக்கிய லாரியின் டிரைவர் காளீஸ்வரன் காயமடைந்திருந்தார். அவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்து மாலை 4.50 மணிக்கு நடந்துள்ளது. விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து சிவகங்கை சங்கரபதி கோட்டை மற்றும் வாகைகுடி கிராமங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications