உங்களை பற்றி சோனியா அம்மாகிட்ட சொல்லுவேன்... சொல்லிகோங்க... ப.சிதம்பரத்தை டென்ஷனாக்கிய நிர்வாகி..!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நடைபெற்ற காங்கிரஸ் நிகழ்ச்சி ஒன்றில் ப.சிதம்பரத்துடன் நிர்வாகி ஒருவர் நேருக்கு நேர் வாதம் செய்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் கடந்த இரண்டு நாட்களாக சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிகுட்பட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

அந்த வகையில் மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி என்ற இடத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில், ப.சிதம்பரம் கலந்துகொண்டார். அப்போது மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டிவேலு பேசும் போது, மாவட்ட காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என்றும் மானாமதுரையில் காங்கிரஸ் வளர்ச்சி அடையாததற்கு தற்போதுள்ள நிர்வாகிகள் தான் காரணம் எனவும் கூறினார்.
தன்னை கட்சி கூட்டங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் யாரும் அழைப்பதில்லை என்றும் தேர்தலின் போது பூத் கமிட்டியை முறையாக அமைக்கவில்லை எனவும் பேசினார். இதையடுத்து அங்கிருந்த மற்ற நிர்வாகிகள் பாண்டிவேலுவை சமாதானம் செய்தனர். ஆனாலும் அவர் யார் பேச்சையும் கேட்டதாக தெரியவில்லை.
தொடர்ந்து உட்கட்சி பிரச்சனைகளையும், உள்ளூர் அரசியல் குறித்தும் பேசி வந்தார். இதனால் கோபமடைந்த முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று பாண்டிவேலுவை அமருமாறு கூறியிருக்கிறார். அப்போது பாண்டிவேலு தனது வேகத்தை குறைக்கவில்லை.
மேலும், ப.சிதம்பரத்திடம், உங்களை பற்றி சோனியா அம்மாவிடமும், ராகுல்காந்தியிடமும் புகார் தெரிவிப்பேன் என்று பாண்டிவேலு சீறியிருக்கிறார். அதற்கு பதிலளித்த ப.சிதம்பரம், தாராளமாக கூறிக்கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு பாண்டிவேலுவை அமர வைத்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசின் செயல்பாடுகள், நடவடிக்கைகளுக்கு எதிராக எப்படி அரசியல் செய்வது, காங்கிரஸ் அரசுக்கும், பாஜக அரசுக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து எப்படி மக்களிடம் எடுத்துரைப்பது என்பன உள்ளிட்ட விவகாரங்களை பேசுவதற்காக கூட்டப்பட்ட கூட்டத்தில், உள்ளூர் அரசியல் பேசி ப.சிதம்பரத்தை டென்ஷனாக்கிவிட்டார் அந்த நிர்வாகி.
இதனிடையே கூட்ட ஏற்பாட்டாளர்கள் ப.சிதம்பரத்தின் கோபத்தை தணிக்கும் வகையில் அவரிடம் தகராறு செய்த நிர்வாகியை அங்கிருந்து வெளியேற்றினர்.












Click it and Unblock the Notifications