அவசியமே இல்லை.. ஏன் "இந்தியா"விலிருந்து நான் கூட பிரதமராகலாமே.. முத்தரசன் அதிரடி.. அப்போ ஸ்டாலின்?
சிவகாசி: நான் கூட பிரதமாகலாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசியுள்ளார்.
வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் இணைந்து "இந்தியா" என்ற பெயரில் ஒன்றிணைந்துள்ளன.

இதன் கூட்டம் பெங்களூர், பாட்னா ஆகிய இடங்களில் நடந்தது. இதில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை நடத்தியிருந்தனர். இந்த நிலையில் மும்பையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு "இந்தியா"வின் மூன்றாவது கூட்டம் நடந்தது.
இதற்காக முதல்வர் ஸ்டாலின் மும்பை சென்றிருந்தார். அங்கு அவர் பேசுகையில் "இந்தியா"வை பார்க்க பயத்தில் பாஜகவுக்கு காய்ச்சல் வந்துவிட்டதாக கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரோ 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு பிறகு "இந்தியா" கூட்டணி காணாமல் போகும், தோற்று போகும் என கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர்தான் என ஸ்டாலினால் சொல்ல முடியுமா என தேசிய ஜனநாயக கூட்டணியினர் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் பிரதமர் வேட்பாளர் குறித்து குஷ்புவும் கேள்வி எழுப்பியுள்ளார். அதில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் மம்தா பானர்ஜியா, அரவிந்த் கெஜரிவாலா, நிதிஷ்குமாரா, சரத்பவாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் யார் பிரதமர் வேட்பாளராக வேண்டுமானாலும் நிற்கட்டும், பிரதமர் மோடியை எதிர்த்து வென்று காட்டட்டுமே! இந்தியா கூட்டணியை பார்த்து பாஜக பயப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியது இந்த ஆண்டின் மிகப் பெரிய ஜோக் என்றார். ராகுலால் அமேதியில் போட்டியிட்டு வெல்ல முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் சிறந்த பிரதமராக இருப்பார் என திமுக நிர்வாகிகள் ஆங்காங்கே போஸ்டர் ஒட்டாத குறையாக பேசி வருகிறார்கள். அது போல் இந்தியா கூட்டணியில் உள்ள நிதிஷ், மம்தா உள்ளிட்டோருக்கு பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் ஒரு ஆர்வம் இருக்கிறது.
இந்த நிலையில் சிவகாசியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இல்ல திருமண விழாவில் அதன் மாநில செயலாளர் முத்தரசன் பேசினார். அவர் பேசுகையில் இந்தியா கூட்டணியில் முடிவெடுத்தால் நான் கூட பிரதமராகலாம். இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் குறித்து பேச வேண்டிய அவசியமே இல்லை. நிச்சயம் பொருத்தமான ஒருவர் பிரதமராக வருவார். ஒரே நாடு ஒரே தேர்தல் ஆய்வு குழுவில் முன்னாள் குடியரசுத் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளது பொருத்தமற்றது என்றும் முத்தரசன் விமர்சித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்தான் பிரதமர் வேட்பாளர் என சொல்லி வரும் நிலையில் முத்தரசன் நான் கூட பிரதமராகலாம் என கூறியுள்ளது, எந்த அளவுக்கு இந்தியா கூட்டணியில் யார் வேண்டுமானாலும் பிரதமராகலாம் என்ற சுதந்திரம் உள்ளது என்பதை எடுத்துக் கூறவே அவர் அது போன்று கூறியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது. பாஜகவில்தான் பிரதமர் மோடியை தவிர வேறு எந்த கூட்டணி கட்சித் தலைவரும் பிரதமராக முடியாது என்பதைத்தான் முத்தரசன் அவ்வாறு கூறியுள்ளார் என அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications