காரைக்குடியில் சீமான் படுதோல்வி.. 4வது இடத்துக்கு தள்ளப்படுகிறார்.. தேர்தல் ஆய்வாளர் போட்ட குண்டு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டசபை தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் அந்த தொகுதியில் சீமான் 4வது இடத்துக்கு தள்ளப்படுவார் என்று தேர்தல் ஆய்வாளர் ஜேவிசி ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டசபை தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். சிவகங்கை அவரது சொந்த மாவட்டமாகும். இதனால் அவர் காரைக்குடி சட்டசபை தொகுதியை தேர்வு செய்து களமிறங்கி உள்ளார்.

இந்த தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் எஸ் மாங்குடி உள்ளார். இவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாங்குடி காங்கிரஸ் சார்பில் மீண்டும் களமிறங்கி உள்ளார்.
வெல்லும் முனைப்பில் சீமான்
அதேபோல் அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேர்போகி பாண்டிக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பல் மருத்துவரான டிகே பிரபு போட்டியிடுகிறார். சீமான் போட்டியிடுவதால் காரைக்குடி தொகுதியின் மீது அனைவரின் பார்வையும் திரும்பி உள்ளது. சொந்த மாவட்டம் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்பதால் சீமான் இந்த தேர்தலில் வெல்லும் நம்பிக்கையில் உள்ளார்.
தேர்தல் ஆய்வாளர் போட்ட குண்டு
இந்நிலையில் தான் தேர்தல் ஆய்வாளரும், கருத்து கணிப்புகளை நடத்தி வருபவருமான ஜேவிசி ஸ்ரீராம் இன்று சீமானுக்கு அதிர்ச்சி வைத்தியம் ஒன்றை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய பதிவை செய்துள்ளார். அதில், ''காரைக்குடி சட்டசபை தொகுதியில் சீமான் நான்காவது இடத்துக்கு தள்ளப்படுவது மிகவும் வருத்தமாக உள்ளது'' என கூறியுள்ளார்.
Extremely sad to see Annan @SeemanOfficial @Seeman4TN being pushed down to 4th position in Karaikudi Assembly constituency.
— JVC Sreeram (Bulls Eye) (@sreeramjvc) April 14, 2026
இதன்மூலம் சீமான் காரைக்குடியில் வெல்ல வாய்ப்பில்லை எனவும், 4வது இடத்தை பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த தொகுதியில் எந்த கட்சியின் வேட்பாளர் வெல்வார்? எந்த கட்சியின் வேட்பாளர் 2வது இடம் பிடிப்பார்? யாருக்கு 3வது இடம் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
யார் இந்த ஜேவிசி ஸ்ரீராம்?
தற்போது இந்த கருத்தை தெரிவித்துள்ள ஜேவிசி ஸ்ரீராம் தேர்தல் ஆய்வாளராக உள்ளார். Winning Election என்ற அமைப்பின் ஃபவுண்டராக உள்ளார். பல்வேறு கருத்து கணிப்புகளை நடத்தி வருகிறார். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் அவரது கருத்து கணிப்பு 99.66 சதவீதம் துல்லியமாக இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த தேர்தலில் பாஜக 302+ தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 347 + தொகுதிகளிலும் வெல்லும் என்று தெரிவித்து இருந்தார். காங்கிரஸ் கட்சி 53+ தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 79 + தொகுதிகளிலும் வெல்லும் என்று கணித்து இருந்தார். மற்றவர்கள் 106 முதல் 116 தொகுதிகளில் வெல்வார்கள் என கூறியிருந்தார்.
அதேபோல் தேர்தலில் பாஜக 303 இடங்களிலும், பாஜக கூட்டணி 353 இடங்களிலும், காங்கிரஸ் 52 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 91 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. இப்போது தமிழக சட்டசபை தேர்தல் பற்றியும், கள நிலவரம் பற்றியும் அவர் தொடர்ச்சியாக டிவி சேனல்கள் மற்றும் யூடியூப் சேனல்களில் பேசி வரும் நிலையில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
சீமானின் முந்தைய வரலாறு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் சீமான் ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் ஒவ்வொரு தொகுதியில் களமிறங்கி வருகிறார். கடந்த 2016 சட்டசபை தொகுதியில் கடலூரில் களமிறங்கினார். மொத்தம் 12,497 ஓட்டுகளை பெற்றார். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்சி சம்பத் வென்ற நிலையில் திமுக, தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்), பாமக கட்சி வேட்பாளர்களை விட பின்தங்கி 5ம் இடம் பிடித்தார்.
அதன்பிறகு 2021 சட்டசபை தேர்தலில் சீமான் திருவொற்றியூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் திமுகவின் கேபி சங்கர் 88,185 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து களமிறங்கி அதிமுக வேட்பாளர் கே குப்பன் 50,424 ஓட்டுகள் வாங்கி 2ம் இடம் பிடித்தார். நாம் தமிழர் சீமான் 48,597 வாக்குகள் வாங்கி 3ம் இடம் பிடித்தார்.
நாம் தமிழர் தொண்டர்கள் அதிர்ச்சி
இப்போது வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் காரைக்குடி சட்டசபை தொகுதியில் சீமான் களமிறங்கி உள்ளார். இப்படியான சூழலில் தேர்தல் ஆய்வாளர் ஜேவிசி ஸ்ரீராமின் இந்த பதிவு சீமான் மட்டுமின்றி மொத்த நாம் தமிழர் கட்சியினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications