ரயில்வே காலிப்பணியிடங்களை நிரப்புங்க! அப்புறம் புல்லட் ரயில் பற்றி பேசலாம்! -கார்த்தி சிதம்பரம்
சிவகங்கை: ரயில்வே துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால், பணிச்சுமை காரணமாக பல பிரிவுகளிலும் ஊழியர்கள் கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டிய நிலை உள்ளதாக கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பணிகளை தனது சிவகங்கை தொகுதியில் சத்தமின்றி தொடங்கிவிட்டார் கார்த்தி சிதம்பரம். இவருக்கு மீண்டும் காங்கிரஸ் தலைமை சீட் கொடுக்குமா என்பது தனிச் செய்தி. இதனிடையே சிவகங்கை தொகுதியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வரும் இவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய கார்த்தி சிதம்பரம், இந்தியாவில் ரயில்வே கட்டுமானங்கள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனக் கோரியதுடன் ஒடிசா ரயில் விபத்தை பொறுத்தவரை ரயில்வே துறையின் தொழில்நுட்பக் கோளாறே காரணம் எனத் தெரிவித்தார். ஊழியர்கள் பற்றாகுறையால் ரயில்வே துறையின் டெக்னிக்கல் பிரிவு, பைலட் பிரிவு, உள்ளிட்ட பல பிரிவுகளிலும் பணி செய்யும் நேரம் அதிகரித்துள்ளதாக கூறினார்.
இந்தியாவில் புல்லட் ரயில் விட நினைக்கும் மத்திய அரசு முதல் வேலையாக நாடு முழுவதும் ரயில்வே கட்டுமானங்களை தரமிக்கதாக, பாதுகாப்பானதாக இருக்கச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்திய ரயில்வேயின் தரத்தை உயர்த்திய பிறகு புல்லட் ரயில் விடும் முயற்சியை தொடங்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் கூறினார்.
கார்த்தி சிதம்பரம் இவ்வாறு பேட்டியளித்த போது அவரது அருகில் முன்னாள் மத்திய அமைச்சரும், அவரது தந்தையுமான ப.சிதம்பரமும் உடனிருந்தார். அதேபோல் மானாமதுரை சுற்றுவட்டார காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்திய கார்த்தி சிதம்பரம், தனது நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு கூட்டத்தை நடத்தும் திட்டத்தில் இருக்கிறார்.












Click it and Unblock the Notifications