இனி விசில் ஊதக்கூடாது.. தூய்மை பணியாளரின் விசிலை பிடுங்கி குப்பையில் வீசிய சிவகங்கை திமுக கவுன்சிலர்
சிவகங்கை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் காலையில் விசிலடித்து குப்பை சேகரிக்கும் தூய்மை பணியாளரை அழைத்து ‛இனி என் வார்டில் விசில் ஊதக்கூடாது' என்று கூறி அந்த விசிலை வாங்கி குப்பையில் வீசிய சம்பவம் நடந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. முதல் முறையாக விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் களமிறங்க உள்ளது. விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கி உள்ளது. விசில் சின்னத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பணியில் தவெகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் தற்போது சிவகங்கையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் விசில் ஊத தூய்மை பணியாளருக்கு திமுக கவுன்சிலர் தடை போட்டுள்ளார்.
விசிலடிக்க திமுக கவுன்சிலர் தடை
அந்த கவுன்சிலரின் பெயர் அயூப் கான். இவர் சிவகங்கை நகராட்சியின் 21வது வார்டின் கவுன்சிலராக உள்ளார். வழக்கம்போல் அவரது வார்டில் இன்று காலையில் தூய்மை பணியாளர்கள் குப்பை சேகரிக்க சென்றனர்.
தூய்மை பணியாளர்கள் விசிலடித்து குப்பைகளை சேகரித்து வந்தனர். அப்போது அங்கு சென்ற திமுக கவுன்சிலர் அயூப் கான் தூய்மை பணியாளர் விசிலடித்து குப்பை சேகரிக்க தடை போட்டார்.
ஸ்பீக்கர்
மேலும் தூய்மை பணியாளர் வைத்திருந்த விசிலை வாங்கி குப்பையில் போட்டார். அதன்பிறகு குப்பை சேகரிப்பு பாடலுடன் கூடிய ஸ்பீக்கரை கொடுத்தார். இனிமேல் விசிலடித்து குப்பையை சேகரிக்க கூடாது. குப்பை சேகரிப்பை அதற்கான பாடலுடன் கூடிய ஸ்பீக்கரை வைத்து தான் சேகரிக்க வேண்டும் என்று உத்தரவும் பிறப்பித்தார்.
கவுன்சிலர் சொல்வது என்ன?
இதுபற்றி திமுக கவுன்சிலர் அயூப் கான் கூறுகையில், ‛‛நான் 21வது வார்டு நகர்மன்ற உறுப்பினராக இருக்கிறேன். நம் வார்டில் காலையில் சூரியன் உதித்தவுடன் குப்பைகளை சேகரிப்பதற்காக நம்முடைய சுகாதார பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக வருகின்றனர். அவர்கள் வரும்போது ஊதி (விசில்)சத்தம் எழுப்புகின்றனர்.
விசில் சத்தம் கேட்க கூடாதாம்
இனிமேல் நம்ம வார்டில் இந்த சத்தம் வேண்டாம். அதற்கு பதில் குப்பைகளை சேகரிப்பதற்கான பாடல்களுடன் அடங்கிய ஒலிப்பான் (ஸ்பீக்கர்) வழங்கி உள்ளோம். இனிமேல் நம்ம வார்டில் அந்த (விசில்) சத்தம் கேட்கக்கூடாது. இந்த (ஸ்பீக்கர்) சத்தம் தான் கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறேன் '' என்றார்.
இந்நிலையில் தான் திமுக கவுன்சிலர் விசிலை பிடுங்கி குப்பை வண்டியில் வீசியதும், அதற்கு பதிலாக ஸ்பீக்கரை வழங்கும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
சேப்பாக்கத்தில் விசிலுக்கு தடை
முன்னதாக ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் டி20 உலககோப்பை போட்டியில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் மோதின. அப்போதும் மைதானத்துக்குள் கிரிக்கெட் ரசிகர்கள் விசில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் மைதானத்தை சுற்றிய இடங்களில் தடை விதிக்கப்பட்டது. இது சர்ச்சையை கிளப்பியது.
பிசிசிஐ சார்பில் விசில் எடுத்து செல்ல எந்த தடையும் விதிக்கப்படாத நிலையில் போலீசார் சார்பில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதன் பின்னணியில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது தான் முக்கிய காரணம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications