சிவகங்கை இரட்டை கொலை.. சொகுசு காரை சுக்குநூறாக உடைத்து, முகத்தையே சிதைக்க காரணம்? கொதிக்கும் உறவுகள்
சிவகங்கை: சிவகங்கை இரட்டை கொலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.. 5 பேர் கைதாகியும், சடலங்களை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.. இதில் தொடர்புடைய 8 பேரையும் கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் போராட்டம் நடத்தி வருவதால், பஸ் ஸ்டாண்டு பகுதியில் போக்குவரத்து முடங்கியுள்ளது.. புது மாருதி எர்டிகா காரை கும்பல் சுக்குநூறாக உடைத்தது எப்படி? உயிருக்கு பயந்து ஓடிய 2 பேரை ஓட ஓட விரட்டி சென்று முகத்தை சிதைத்த கொடூரத்தின் பின்னணி என்ன? என்ற விசாரணையும் நடக்கிறது.
சிவகங்கை அருகே காளையார்கோவில் அருகே குருந்தணி வாரியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன், 24 வயதாகிறது.. இவரது நண்பர் சிறுவேலங்குடியைச் சேர்ந்த பூப்பாண்டி, 25 வயதாகிறது..

சிவகங்கை மாருதி எர்டிகா கார்
இவர்கள் புதிதாக மாருதி எர்டிகா கார் வாங்கியிருக்கிறார்கள்.. நேற்று அந்த காரில் சென்ற இருவரும், முதல் சர்வீஸுக்காக ஷோரூமுக்கு காரை கொண்டு சென்று திரும்பியிருக்கிறார்கள். பிறகு கொடிக்காடு கண்மாய்க்கரையில் காரை நிறுத்திவிட்டு, 2 பேரும் உட்கார்ந்து மது அருந்தியுள்ளனர். அடுத்த சில நிமிடங்களிலேயே 4-க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் டூவீலர்களில் அங்கு வந்துள்ளது.
திடீரென அந்த கும்பல் காரை சுற்றி வளைத்து, ஆயுதங்களால் கார் கண்ணாடிகளை உடைத்துள்ளது. மேலும், காரின் கதவைத் திறக்கவும் முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தெய்வேந்திரனும் பூப்பாண்டியும் உயிருக்கு பயந்து காரைவிட்டு கீழே இறங்கி ஓட்டம் பிடித்துள்ளனர்.
முகத்திலேயே சிதைத்தது ஏன்
ஆனாலும், அந்த கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டிச் சென்றுள்ளது. பிறகு ஆயுதங்களால் வெட்டிக் கொன்றதுடன், இருவரது முகங்களையும் சிதைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளது.
சடலங்கள் கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் தெய்வேந்திரன் வாங்கிய புதிய எர்டிகா கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. முதல் சர்வீஸுக்காக ஷோரூமிற்கு எடுத்துச் சென்று மீண்டும் காரை எடுத்துவந்த நேரத்தில்தான் இந்த கொடூரம் அரங்கேறியதாக கூறப்படுகிறது.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை தொடங்கினர். இருவரது உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.. எஸ்.பி. அபிஷேக் குப்தா நேரில் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார்.
மோப்ப நாய் லைலா
கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. அமலஅட்வின் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் லைலா வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் லைலா, கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு கார் வரை ஓடியிருக்கிறது.. பிறகு, அங்கிருந்து முள்காடு வழியாக சென்று பிரதான சாலையில் நின்றுவிட்டது.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். அந்த தேடுதல் வேட்டையின் முடிவில் பாலமுருகன், தனராஜ், சந்தோஷ், சதீஷ்குமார், காளீஸ்வரன் ஆகிய 5 பேரை இன்று காலை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். இந்த கொலைக்கான முழுமையான காரணம் என்ன என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
அரண்மனைவாயில் போராட்டம்
ஆனால், 5 பேர் கைது செய்யப்பட்ட தகவல் வெளியான பிறகும் உறவினர்கள் சமாதானம் அடையவில்லை. கொலையில் தொடர்புடைய 8 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, இருவரின் சடலங்களையும் வாங்க மறுத்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஊர்வலமாக வந்த உறவினர்கள் சிவகங்கை பஸ் ஸ்டாண்டு மற்றும் அரண்மனைவாயில் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பஸ்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசையாக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
போலீசார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால், உறவினர்களை சமாதானப்படுத்த முடியாததால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 8 பேரும் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று உறவினர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால் சிவகங்கையில் பரபரப்பு நீடித்து வருகிறது.
நொறுங்கிய சொகுசு கார்
ஆனால், முன் விரோதம் காரணமாக இந்தக்கொலை நடந்திருப்பதாக கூறுகிறார்கள்.. கண்மாயில் மதுபாட்டில்கள் கிடந்ததால் மதுகுடிக்கும் தகராறில் இந்த கொலை அரங்கேறியது என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெய்வேந்திரன் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மதுபான பார் நடத்தி வருகிறாராம்.. புதிதாக வாங்கிய சொகுசு காரை, அந்த கும்பல் சுக்குநூறாக நொறுக்கியிருக்கிறது.. கண்மாய் கரையில் மதுபான பாட்டில்கள், 3 ஜோடி செருப்புகள் கிடந்துள்ளன.. 2 இளைஞர்களின் முகத்தைதான் கொலையாளிகள் அதிகம் சிதைத்துள்ளார்களாம்.. எனவே சிசிடிவி வைத்து இன்னும் விசாரணை நடந்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுக்க அலர்ட் விடுக்கப்பட்டு, தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
